தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரை மிரட்டிய அதிமுக நிர்வாகி : தரக்குறைவாக பேசிய ஆடியோ வெளியானது!!

17 November 2020, 5:47 pm
DMK Executive - Updatenews360
Quick Share

திருப்பூர் : குண்டடம் அருகே கொழுமங்குழி பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள வார்டு உறுப்பினரை முன்னாள் தலைவர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டாமென மீண்டும் தகாத வார்த்தையால் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொழுமங்குழி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பஞ்சாயத்து தலைவராக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிரியா என்பவரை போட்டியின்றி தேர்ந்தெடுத்தனர்.

கடந்த எட்டாவது மாதம் அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கார்த்திகேயன், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் பிரியாவை தகாத வார்த்தையில் பேசியிருந்தார்.

இந்த நிலையில் கொழுமங்குழி ஊராட்சியில் உள்ள 1வது வார்டு உறுப்பினர் செல்வன் என்பவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வார்டு உறுப்பினராக இருந்து வருகிறார்.

செல்வன் (கொழுமங்குழி பஞ்சாயத்து 1வது வார்டு உறுப்பினர்)

இந்நிலையில் மீண்டும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் 1வது வார்டு உறுப்பினர் செல்வன் என்பவரை தகாத வார்த்தையில் திட்டி அலுவலகத்திற்கு செல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொழுமங்குழி பஞ்சாயத்து அலுவலகத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் என்பவரின் தலையீடு அதிகரித்துள்ளதாக கொழுமங்குழி பஞ்சாயத்து பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒன்றாவது வார்டு உறுப்பினர் செல்வன் கூறுகையில் கொழுமங்குழி பஞ்சாயத்து அலுவலகத்திற்கு செல்ல கூடாது என தன்னை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் மிரட்டுவதாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாதிக்கப்பட்ட வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வது தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளார்.