தந்தையை கணவர் என குறிப்பிட்ட திமுக பெண் வேட்பாளர்..! : நிராகரிக்கப்படுமா வேட்புமனு?

Author: kavin kumar
5 February 2022, 2:47 pm
Quick Share

கோவை: கோவையில் திமுக சார்பில் போட்டியிடும் இளம் வேட்பாளர் தந்தையை தனது கணவர் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

கோவை கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் சேனாதிபதி. இவரது மகள் நிவேதா 97 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்காக போட்டியிடுகிறார். திமுக சார்பில் மேயர் வேட்பாளராக முன் நிறுத்த வாய்ப்புள்ளவர்களில் நிவேதாவும் ஒருவர். இந்த நிலையில் நிவேதா தனது வேட்பு மனுவை கோவை குனியமுத்தூரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நேற்று தாக்கல் செய்தார். இதனிடையே நிவேதா சமர்ப்பித்த வேட்பு மனுவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

நிவேதாவின் வேட்புமனுவில் உள்ள நோட்டரி படிவத்தில், தான் போட்டியிடும் 97வது வார்டுக்கு பதிலாக 96வது வார்டில் போட்ட்டியிடுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தந்தை சேனாதிபதியை கணவர் என்று குறிப்பிட்டுள்ள நிவேதா, தனது கணவருக்கு ரூ.28 கோடியில் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தனது நோட்டரி படிவத்தில் தந்தையை கணவர் என்று குறிப்பிட்டதுடன் அவருக்கு 97 வயது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர தேர்தல் அலுவலர் வைத்துள்ள வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்கும் இயந்திரத்தில் நிவேதாவின் வாக்காளர் அட்டையை சோதித்தால் இந்த அட்டை செல்லாது என்று வருவதாகவும், வாக்காளர் பட்டியலில் பெயரே இல்லாதவர் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

ஒரு கையெழுத்து மாறினாலே வேட்புமனுவை நிராகரிக்கும் தேர்தல் அலுவலர்கள், இந்த வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலர் இந்த வேட்பு மனுவை நிராகரிக்க மறுப்பதாகவும், குளறுபடிகள் இருந்தும் ஆளும் திராவிட முன்னேற்ற கட்சிக்கு அதிகாரிகள் ஆதராவாக செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Views: - 1134

0

0