திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் கொரோனா தொற்றால் மரணம்..! தொண்டர்கள் அதிர்ச்சி..!
20 August 2020, 1:15 pmகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரகுமான் கான், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழகத்தின் மிக அதிக பாதிப்பிற்கு உள்ளான சென்னையில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தாலும் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் விருதுநகர் போன்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளன.
இதற்கிடையே, கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் சுகாதார ஊழியர்கள், காவலர்கள் எம்எல்ஏக்கள் மட்டுமல்லாது அமைச்சர்களும் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் திமுக எம்எல்ஏ அன்பழகன் உள்ளிட்ட சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் தற்போதைய அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக திமுகவின் முன்னாள் அமைச்சர் ரகுமான் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
ரகுமான் 1996’ல் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், இருமுறை தமிழக சிறுசேமிப்புத் திட்ட அமைச்சராகவும் இருந்துள்ளார். மேலும் 1977, 1980, 1984, 1989 மற்றும் 1996 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி கண்டுள்ளார்.
திமுகவின் அதிரடி பேச்சாளர்களில் ஒருவராக இருந்த ரகுமான் கான், திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சரின் மரணத்திற்கு திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.