திரைப்படம் எடுப்பதாக பணம் பெற்று மோசடி : திமுக நிர்வாகி மீது கிரிமினல் வழக்குப்பதிவு..!

21 October 2020, 7:46 pm
dmk -1 - updatenews360
Quick Share

திரைப்படம் எடுப்பதாகக் கூறி பொதுமக்களிடம் மிரட்டி பணம் பறித்த திமுக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவல்லிக்கேனி- சேப்பாக்கம் தொகுதியில் 114வது வார்டு திமுக செயலாளராக இருப்பவர் கண்ணன். இவர், திரைப்படத்தை இயக்குவதாகக் கூறி பல்வேறு நபர்களிடம் பல லட்சம் ரூபாய் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, சேப்பாக்கத்தைச் சேர்ந்த அன்பழகனிடம் ரூ. 2 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால், கூறியபடி திரைப்படத்தை எடுக்காததால், பணத்தை கொடுத்தவர்கள், அதனை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால், திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பணத்தை கொடுத்தவர்களுக்கு மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதனால், பணத்தை இழந்ததை உணர்ந்தவர்கள் சிலர், திருவல்லிக்கேனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில், போலீசார் திமுக நிர்வாகி கண்ணன் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், கண்ணன் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் மீது ஏற்கனவே பல்வேறு மோசடி புகார்கள் இருந்து வந்ததும், மிரட்டி பணம் பறித்த வழக்கில் கண்ணனும், அவரது மகனும் சிறை சென்று வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு கண்ணனின் மகன் கவிதிரனின் நண்பன் மூர்த்தி என்பவரிடம் ‘நம்மகத’ என்னும் படம் எடுப்பதாகவும், அதில் நடிக்க வாய்ப்பு வேண்டுமென்றால், ரூ.1 லட்சம் முதலீடு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதனை நம்பி அவரும் 2019ம் ஆண்டு ரூ.1 லட்சத்தை கொடுத்துள்ளார். பிறகு தனது தந்தையின் மருத்துவ செலவிற்காக கொடுத்த ரூ.1 லட்சத்தை கண்ணன் மற்றும் அவரது மகன் கவிதிரனிடம் மூர்த்தி திரும்ப கேட்டுள்ளார். ஆனால், இதனை தர மறுத்ததுடன், சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பின்னர், இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தந்தை, மகன் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல், கடந்த 2006ம் ஆண்டில் திமுக ஆட்சியில் இருந்த போது, அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி போராட்டம் நடத்திய பெண்ணை தாக்கிய வழக்கில், திமுக நிர்வாகி கண்ணன் 3 ஆண்டுகள் சிறையும் சென்றுள்ளார்.

Views: - 20

0

0