திமுக எம்.பி., கனிமொழி சோமுவுக்கு கொரோனா… வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை…

Author: kavin kumar
27 January 2022, 11:03 pm
Quick Share

சென்னை : திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் தொற்றுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அண்மையில் காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசு, அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டு அவரவர் வீடுகளில் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் திமுக மருத்துவர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் கனிமொழி சோமுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக காய்ச்சல் மற்றும் அதிக உடல் வலி இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிககையில், ‘கடுமையான உடல் வலியும் காய்ச்சலும் இருந்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. என்னை என் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். என்னை சந்தித்த அனைவரும் தயவுசெய்து தங்களையும் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’என குறிப்பிட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த எம்.பி., கனிமொழி சோமு தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக வரும் 31ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும், அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத் தொடரிலும் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.

Views: - 2235

0

0