இடஒதுக்கீடு கொள்கையை மறுப்பது, எரிமலையுடன் விளையாடுவதற்கு சமம் : ஸ்டாலின் எச்சரிக்கை!!

8 February 2021, 5:55 pm
Stalin Condemned- Updatenews360
Quick Share

மத்திய அரசு துறைகளில் இணைச் செயலாளர் பதவிகளுக்கு தனியார் துறையில் இருந்து 30 பேரை நியமனம் செய்ய முடிவு செய்துள்ளதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூகநீதியைச் சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசின் முக்கிய துறைகளில் இணைச் செயலாளர் பதவிகளுக்குத் தனியார் துறையிலிருந்து 30 பேரை நியமிக்க முடிவு செய்திருப்பதற்கு” திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பட்டுள்ளார்.

மேலும் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ந்து வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் செயல்பட்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசு, மண்டல் கமிஷன் தீர்ப்பின்படி இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசின் ஒரே ஒரு துறையில் கூட முழுமையாகச் செயல்படுத்தவில்லை.

பட்டியலின – பழங்குடியின மக்களின் இடஒதுக்கீட்டையும் புறக்கணித்து – மத்திய அரசின் துறைகளில், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும், பட்டியலின – பழங்குடியினத்தவருக்கு இடமில்லை என்ற எழுதப்படாத உத்தரவினை வேகமாகச் செயல்படுத்தி வருவது நாட்டின் சமூகநீதிக் கட்டமைப்பையே உருக்குலைக்கும் செயலாகும்.

புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, வங்கித் தேர்வுகள், யூ.பி.எஸ்.சி தேர்வுகள், ரயில்வே தேர்வுகள், தபால் தந்தி இலாகா உள்ளிட்ட மத்திய அரசின் துறைகளுக்கு நடைபெறும் பல்வேறு தேர்வுகள் ஆகியவற்றில், ஏற்கனவே சமூகநீதிக்குச் சாவுமணி அடித்து- போதாக்குறைக்குப் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு மின்னல் வேகத்தில் 10 சதவீத இடஒதுக்கீடு அளித்து – இந்நாட்டின் நிர்வாகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட – பட்டியலின – பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்க உரிமையில்லை என்று இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவே மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.

இந்திய வரலாற்றில், சமூகநீதிக்கும் – இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கும் முற்றிலும் எதிரான இப்படியொரு அரசு இப்போது பா.ஜ.க. தலைமையில் அமைந்திருக்கிறது என்பது, நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் கேடு. இதன் அடுத்தகட்டமாகவே – தற்போது இணைச் செயலாளர்கள், கூடுதல் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்குத் தனியார் நிறுவனங்களில் இருந்து ஆட்களை – அதுவும் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் ஊறிப் போனவர்களை மத்திய அரசின் துறைகளுக்கு அழைத்து வந்து- எஞ்சியிருக்கும் சமூகநீதிக் கட்டமைப்பையும் தகர்க்க, பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு செய்வது மிகுந்த வேதனையளிக்கிறது.

தனியார் துறையிலிருந்து நியமனம் செய்யப்படும் போது இடஒதுக்கீட்டுக் கொள்கை தூக்கி எறியப்படும். அப்படி நியமிக்கப்படுவோர் அவர்களின் சித்தாந்தத்தில் உள்ளவர்களை அரசுத் துறைகளில் சேர்த்து விடுவார்கள். பத்து சதவீத இடஒதுக்கீடு போதாது என்று இப்படிக் குறுக்கு வழியிலும் இடஒதுக்கீட்டுக் கொள்கையைச் சீரழிக்க நடக்கும் இந்த முயற்சிகளைத் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது.

தேர்தலில் பொய்ப் பிரச்சாரம் செய்து, இதர பிற்படுத்தப்பட்ட- பட்டியலின- பழங்குடியின மக்களின் வாக்குகளைப் பெற்ற மத்திய பா.ஜ.க. அரசு இப்போது அவர்களைப் பழிவாங்கும் விதத்தில் செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, மத்திய அரசுத் துறைகளில் இணைச் செயலாளர், கூடுதல் செயலாளர் போன்ற பதவிகளுக்குத் தனியார் நிறுவனங்களில் இருந்து நியமனம் செய்யும் முடிவை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என்றும் – அனைத்துத் துறைகளிலும் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின – பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை முழுமையாக அமல்படுத்திட வேண்டும் என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 0

0

0