திமுக எம்எல்ஏ சேகர் பாபுவிற்கு கொரோனா : சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
24 December 2020, 12:25 pmசென்னை : திமுகவின் முக்கிய எம்எல்ஏக்களில் ஒருவராக வலம் வரும் சேகர் பாபுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆரம்பத்தில் வேகமாக பரவிய கொரோனா வைரஸின் பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும், தொற்று பரவாமல் இருக்க, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளை சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
ஆனால், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி விட்டதால், அரசியல் தலைவர்கள் சமூக இடைவெளியை மறந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்படி, திமுக தேர்தல் களப்பணியில் ஈடுபட்டு வந்த துறைமுகம் தொகுதி எம்எல்ஏ சேகர் பாபுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் மேற்கொண்ட பயணங்களின் போது அவருடன் தொடர்ந்து பயணித்து வந்த அவர், உதயநிதி கலந்து கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து நடத்தி கொடுத்து வந்தார்.
காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது, அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
0
0