‘பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு…ரூ.100 கோடி நஷ்ட ஈடு’ கேட்டு திமுக நோட்டீஸ்: நீதிமன்றத்தில் சந்திக்க நான் ரெடி…அண்ணாமலை பதிலடி..!!

Author: Rajesh
26 March 2022, 6:35 pm
Quick Share

சென்னை: முதலமைச்சர் துபாய் பயணம் குறித்து அவதூறு பேசியதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு ‘பகிரங்க மன்னிப்பு, ரூ.100 கோடி நஷ்ட ஈடு’ கேட்டு தி.மு.க அனுப்பியுள்ள நோட்டீசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக துபாய் சென்றுள்ளார். இதனிடையே, விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,

Image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது துபாய்க்குத் தனியே செல்லவில்லை. அவருடன் ஒரு பட்டாளமே சென்றுள்ளது. முதலமைச்சரின் துபாய் பயணத்தையொட்டி, 5 ஆயிரம் கோடி ரூபாய் அங்கு பறந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. துபாயில் நடைபெறும் விழாவில் தமிழகம் சார்பிலான அரங்கைத் திறந்துவைக்க எதற்கு அவ்வளவு பணம் என்று கேள்வி எழுப்பினார்.


அதேபோல், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் முதல்வரின் துபாய் பயணம் குறித்து காட்டமான விமர்சனங்களை அண்ணாமலை முன்வைத்தார். இந்நிலையில், முதல்வரின் துபாய் பயணம் குறித்து அவதூறு பேசியதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும், ரூ.100 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று கேட்டு அவருக்கு திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுக சார்பாக அக்கட்சியின் அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி இந்த வக்கீல் நோட்டீஸை அனுப்பியுள்ளார்.

அதில், திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் துபாய் எக்ஸ்போ 2022இல் கலந்து கொண்டதை கொச்சைப்படுத்தியும், உள்நோக்கம் கற்பிற்கும் வகையிலும், விருதுநகர் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் துபாய் பயணம் வெளிப்படையானது மற்றும் அதன் நோக்கம் தமிழகத்திற்கு அதிக முதலீடு வாய்ப்புகளை ஈர்ப்பது. முதல்வரின் அலுவல் சார்ந்த பயணத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, அடிப்படை ஆதாரம் இல்லாமல் நீங்கள் பேசியிருப்பது திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக இருக்கிறது என்றும் அந்த நோட்டீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பொது வெளியில் பகிரங்கமாக தமிழக முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அதேபோல், நஷ்ட ஈடாக ரூ.100 கோடி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் எனவும் அந்த வக்கீல் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு திமுக கட்சி, என் மீது, மானநஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன். தி.மு.க.வின் முதன்மை குடும்பம், சாதாரண சாமானியனான என்னையும், அவர்களைப் போன்ற துபாய் குடும்பத்துக்கு, சரிசமமாக நடத்துகிறது.

நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. திமுகவின் அச்சுறுத்தல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன். தமிழகத்துக்கான, என் போராட்டம் தொடரும்… துணிவுடன். மக்கள் துணையுடன்… என பதில் அளித்துள்ளார்.

Views: - 698

0

0