திமுக ஆட்சி இந்து விரோத ஆட்சி : இந்து முன்னணி பிரமுகர் தாக்கப்பட்டது குறித்து காடேஸ்வரா சுப்பிரமணியம் கருத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2021, 2:17 pm
Kadeswara Subramaniam -Updatenews360
Quick Share

கோவை : திமுக ஆட்சி இந்து விரோத ஆட்சி என்றும் உளவுத்துறை சரியில்லை என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணியின் மேற்கு நகர செயலாளர் சந்திரசேகரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்களால் தாக்கப்பட்டார்.அவரை மீட்ட காவல் துறையினர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து மேற்கு மண்டல காவல் துறைத்தலைவர் சுதாகர்,துணைத்தலைவர் முத்துச்சாமி,எஸ்.பி.செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் இத்தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது கொலை முயற்சி (307),வழிமறித்து தடுத்தி நிறுத்தி தாக்குதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்,பதற்றத்தை தணிக்கும் வகையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் முக்கிய இடங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மேட்டுப்பாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சந்திரசேகரை நேரில் சந்தித்த இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. இரும்பு ராடால் ஒரே மாதிரி தாக்கப்படுவதால் தொடர்ந்து உளவுத்துறை சரியில்லை என குற்றஞ்சாட்டினார்.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பயங்கரவாதிகளுக்கு ஏதோ அவர்கள் ஆட்சி தான் நடைபெற்று வருவதாக மனதில் நினைத்துக்கொண்டுள்ளனர். அதனால் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,திமுக ஆட்சி இந்து விரோத ஆட்சி என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும்,பல்வேறு சம்பவங்கள் தமக்கு எடுத்துக்காட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

அப்போது,இந்து முன்னணியின் மாநில செயலாளர் கிஷோர் குமார்,கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார்,கிழக்கு நகர செயலாளர் சதீஷ் குமார்,நகர துணைத்தலைவர் தங்கவேலு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Views: - 344

1

0