திடீரென எப்படி பிரதமர் மோடி விருந்தாளியானார்…? மீண்டும் திமுகவை சீண்டிய சீமான்…

Author: kavin kumar
28 December 2021, 9:47 pm
Quick Share

‘பகையாளி என்பது விருந்தாளியானது போல, நாளைக்கு விருந்தாளி கூட்டாளியாகவும் மாறி, மக்களை ஏமாற்றலாம்’ என ‘Go Back Modi’ தொடர்பாக திமுக கூறிய கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

திமுக எதிர்கட்சியாக இருந்த போது பிரதமர் மோடியின் ஒவ்வொரு தமிழகப் பயணத்தின் போதும், Go back Modi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்படும். அதுமட்டுமில்லாமல், பிரதமர் மோடி செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புக் கொடி காட்டுவதுடன், கருப்பு பலூனும் பறக்கவிட்டு எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கமாகும். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் இந்த செயலுக்கு பாஜக, அதிமுக கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் ஜன.,12ம் தேதி தமிழக வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக அரசு அமைந்த பிறகு, பிரதமர் மோடி தமிழகம் வருவது இதுவே முதல்முறையாகும். இதனிடையே, பிரதமரின் தமிழக வருகை தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகு, Go back Modi என்ற ஹேஷ்டேக் மீண்டும் டிரெண்ட் செய்யப்பட்டது. இது பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனிடையே, பிரதமர் மோடியின் வருகைக்கு திமுக கருப்புக் கொடி காட்டுமா..? என்று எதிர்பார்ப்பு கூட்டணி கட்சிகளிடையே எழுந்திருந்தது.இந்நிலையில், பிரதமர் மோடியின் வருகையின் போது, திமுகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு திமுக அமைப்பு செயலாளரும், எம்பியுமான ஆர்எஸ் பாரதி பேட்டியளித்துள்ளார்.அப்போது, அவர் பேசியதாவது :-“எதிர்க்கட்சியாக இருந்தபோது கறுப்புக் கொடி காட்டினோம். தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டதால் அப்படி செய்தோம். இப்போது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக அவர் உறுதி அளித்துள்ளார். இப்போது நாங்கள் தான் அவரை அழைத்திருக்கிறோம். பிறகு எப்படி நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியும். அவரை விருந்தினராக அழைத்திருக்கிறோம். பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி அல்ல. இந்துத்துவாதான் எதிரி . திமுக தன்மானத்தோடுதான் நடந்துகொள்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ‘Go Back Modi’ தொடர்பாக திமுக கூறியது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆட்சிக்கு வருமுன் #GoBackModi என்றவர்கள் அதிகாரத்தில் அமர்ந்ததும், ‘பிரதமர் மோடி வருகையை எதிர்க்கமாட்டோம்; அவர் எங்கள் பகையாளி அல்ல; விருந்தாளி’ என்கிறார்கள். அம்மையார் மம்தாவுக்கும், ஐயா பினராயி விஜயனுக்கும் பகையாளியாக இருப்பவர், ஐயா ஸ்டாலினுக்கு மட்டும் விருந்தாளி ஆனதெப்படி? பகையாளி என்பது விருந்தாளியானதுபோல, நாளைக்கு விருந்தாளி கூட்டாளியாகவும் மாறி, மக்களை ஏமாளியாக்கிக் கறுப்புக்கொடியைக் கீழே வீசிய கரங்கள், காவிக்கொடியைக் கையிலேந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை!” எனப் பதிவிட்டுள்ளார். கடந்த சில காட்களுக்கு முன்பு பொது மேடையில் பேசும் போது, திமுகவை பச்சை சங்கி என்றும், செருப்பை தூக்கி காட்டியும் பேசி இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.

Views: - 393

0

0