தடுப்பூசிகளை விரயமாக்காமல் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் : தமிழக அரசுக்கு முக ஸ்டாலின் வலியுறுத்தல்

21 April 2021, 4:18 pm
DMK Stalin -Updatenews360
Quick Share

சென்னை : கொரோனா தடுப்பூசிகளை விரயமாக்காமல் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தடுப்பூசிகளை வீணடித்துள்ள மாநிலங்களில் தமிழகம் முதல் மாநிலம் – தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும்‌ சூழலில்‌ தமிழ்நாட்டில்‌ மட்டும்‌ 12.10% தடுப்பூசிகள்‌ விரயமாக்கப்பட்டுள்ளது.

9300 மெட்ரிக்‌ டன்‌ ஆக்சிஜனை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்துவிட்டு, 45 மெட்ரிக்‌ டன்‌ ஆக்சிஜனை தமிழக அரசுக்கே தெரியாமல்‌ டிரான்ஸ்பர்‌ செய்திருக்கிறது. எந்தவித வெளிப்படைத்தன்மையும்‌ இல்லாமல்‌ மத்திய பா.ஜ.க. அரசு திணறுவது மட்டுமின்றி – மாநில அரசுகளையும்‌ “கிள்ளுக்கீரைகளாக” நினைக்கிறது.

தேர்தல்கள்‌ மட்டுமே பிரதமர்‌ நரேந்திர மோடியின்‌ கண்ணுக்குத்‌ தெரிந்ததா..? நிர்வாகத்தில்‌ உலக மகா நிபுணர்‌ என்று பிரச்சாரம்‌ செய்து கொண்டு வரப்பட்டவர்‌ இப்படி படு தோல்வி அடைந்திருப்பது ஏன்‌?

தமிழ்நாட்டில்‌ ரெம்டெசிவர்‌ மருந்து போதிய அளவில்‌ கையிருப்பு இல்லை. இந்தியாவில்‌ உள்ள நிறுவனங்கள்‌ குறைந்த விலைக்கு ஆர்‌.டி.பி.சி.ஆர்‌ கிட்களை விற்க முன்வந்தாலும்‌, அதிமுக அரசு பிரேசில்‌ நாட்டிலிருந்து அதிக விலை கொடுத்து வாங்குவதிலேயே ஆர்வமாக இருக்கிறது.

கொரோனா தொற்றை சமாளிக்க தனியார்‌, அரசு மருத்துவமனைகள்‌ மட்டுமின்றி – ஆரம்ப சுகாதார நிலையம்‌ வரை சிகிச்சையளிக்க எவ்வித நடவடிக்கையும்‌ இதுவரை தமிழக அரசு எடுக்கவில்லை. அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால வேகத்தில் தமிழக அரசு எடுத்திட வேண்டும்‌.

ஆய்வுக்கூட்டங்களையும்‌, ஆலோசனைக்‌ கூட்டங்களையும்‌ ஆக்கபூர்வமாக நடத்தி மக்களை பாதுகாப்பதற்கு மத்திய – மாநில அரசுகள்‌ பொறுப்புடன்‌ செயல்பட்டிட வேண்டும்‌, எனக் கூறியுள்ளார்.

Views: - 176

0

0