முகவரியற்ற சுவரொட்டிகளுக்கு தக்க தண்டனையை மக்கள் கொடுப்பார்கள் : முக ஸ்டாலின் பதிலடி!!

4 November 2020, 5:30 pm
Stalin DMK- updatenews360
Quick Share

சென்னை : பல்வேறு மாவட்டங்களில் தன்னை இகழ்ந்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வரும் சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பெயரோ முகவரியோ வெளியிடத்‌ தெம்பில்லாத தில்லுமுல்லுப்‌ பேர்வழிகளால்‌ சில சுவரொட்டிகள்‌ ஒட்டப்பட்டுகின்றன. எடப்பாடியைப்‌ புகழும்‌ வாசகங்கள்‌ ஒரு பக்கமும்‌, என்னை இகழ்ந்து இன்னொரு பக்கமும்‌ வாசகங்கள்‌! என்னை விமர்சிப்பதைப்‌ பற்றி நான்‌ கவலைப்படவில்லை. ஆனால்‌ விமர்சனம்‌ ஆரோக்கியமானதாகவும்‌, ஆக்கபூர்வமானதாகவும்‌ இருக்க வேண்டும்‌.

முகவரியற்ற சுவரொட்டிகள்‌ ஒட்டப்பட்டால்‌ தடுக்க வேண்டிய கடமை அரசுக்கும்,‌ காவல்துறைக்கும்‌ இருக்கிறது. ஆனால்‌ இதுவரை எந்த மாவட்டத்திலும்‌ நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சுவரொட்டிகளை திமுக தொண்டர்கள்‌ கிழித்து வருகிறார்கள்‌. அச்செயல்களில்‌ ஈடுபட வேண்டாம்‌! அறிஞர்‌ அண்ணாவின்‌ வழியில்‌ வாழ்க வசவாளர்கள்‌ என்றே வாழ்த்துவோம்‌. நமது வெற்றியை உணர்ந்து நம்மை ஆத்திரமூட்டும்‌ செயல்களில்‌ ஈடுபடுகிறார்கள்‌. இப்போது நாம்‌ கடைப்பிடித்திட வேண்டியது பொறுமை.

ஊடகங்களில்‌ உள்ள சிலர்‌ மூலம்‌, தங்களுக்கு சாமரம்‌ வீசும்‌ கட்டுரைகளையும்‌, காட்சிகளையும்‌ உருவாக்கி வரும்‌ ஆளும்‌ கட்சிக்‌ கும்பலின்‌ உத்திதான்‌, கண்ணும்‌ கருத்தும்‌ கூசும்‌ இந்தக்‌ கேவலமான சுவரொட்டிகள்‌. ஒட்டுகிறவர்கள்‌ அனைவரையும்‌ ஒட்டு மொத்தமாகப்‌ பொதுமக்கள்‌ ஓட ஓட விரட்டியடிக்கப்‌ போகிறார்கள்‌.

கொரோனாவில்‌ தோல்வி, தமிழக மாணவர்களின்‌ கல்வி வாய்ப்பைக்‌ காப்பாற்ற, மாநில உரிமைகளைப்‌ பெற முடியாத கொள்ளைக்‌ கூட்டம்‌ அர்த்த ராத்திரியில்‌ அநாமதேய சுவரொட்டிகளை ஒட்டும்‌ முயற்சி தொடருமானால்‌, தமிழ்‌ மக்கள்‌ மன்றம்‌ வழங்கப்‌ போகும்‌ கடும்‌ ஆயுள்‌ தண்டனை வரலாற்றில்‌ மறக்க முடியாததாக இருக்கும்‌!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 15

0

0