திமுகவில் இருந்து எம்.எல்.ஏ கு.க.செல்வம் நிரந்தரமாக நீக்கம்..! விரைவில் பாஜகவில் இணைகிறார்.?

13 August 2020, 1:02 pm
Quick Share

ஆயிரம் விளக்கு தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ., கு.க. செல்வம், கட்சி பதவி பெறுவது தொடர்பாக தலைமையிடம் ஏற்பட்ட அதிருப்தி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

சமீப காலமாக திமுக தலைமைக்கும் கு.க. செல்வதுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்த சூழலில் அவர் கடந்த 5ஆம் தேதி டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர் நட்டாவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மீதான தனது அதிருப்தியை செய்தியாளர்களிடம் கூறினார்.

அப்போது, தாம் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு மின் தூக்கி அமைப்பது குறித்து நாட்டாவை சந்தித்து பேசியதாக குறிப்பிட்டார். மேலும், இந்து கடவுளை அவதூறாக பேசியவர்களை மு.க ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முன்வைத்தார்.

இதனை தொடர்ந்து, கு.க. செல்வத்தை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கட்சியில் இருந்து தற்காலிகமாக இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், பாஜக தலைவரை நேரில் சந்தித்தது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் திமுக கட்சி தலைமையால் அறிவுறுத்தப்பட்டது.

இதனால், மேலும் அதிருப்தி அடைந்த கு.க. செல்வம், திமுகவில் இருந்து தன்னை தற்காலிகமாக நீக்கியிருப்பது இயற்கை நீதிக்கு விரோதமானது எனவும், திமுகவின் கொள்கை முடிவுகளில் பிற கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து பேசக்கூடாது என குறிப்பிடப்படவில்லை எனவும் தேரிவித்தார்.

இதனால், தற்காலிக நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினார். இந்த சூழலில், தற்காலிக இடை நீக்கத்திற்கு பிறகு கு.க செல்வம் அளித்த விளக்கம் திருப்தியாக இல்லை எனக்கூறி, தற்போது அவர் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

திமுகவுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பாஜவுடன் ஒட்டி உறவாடி வந்த கு.க. செல்வம், திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர் பாஜகவில் இணைவார் என அரசியல் வட்டாரங்களில் முனுமனுக்கப்படுகிறது.

Views: - 11

0

0