உச்சநீதிமன்றம் கூறியபடி செய்யறீங்களா? இல்ல நாங்க ரத்து பண்ணட்டா : இறுதி அவகாசம் அளித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
9 June 2022, 8:19 pm
HC Warn TN Govt -Updatenews360
Quick Share

போலீஸ் சித்திரவதை, லாக்-அப் மரணங்கள் உள்ளிட்ட காவல்துறைக்கு எதிரான புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் காவல்துறை புகார் ஆணையம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த 2013-ம் ஆண்டு தமிழகத்தில் காவல்துறை சீர்திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டது.

மேலும் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவல்துறைக்கு எதிரான புகார்களை அளிக்க மாநில, மாவட்ட அளவிலான புகார் ஆணையங்கள் அமைக்கப்பட்டன. மாநில அளவில் உள்துறை செயலாளர் தலைமையில் டி.ஜி.பி. மற்றும் ஏ.டி.ஜி.பி. ஆகியோர் உறுப்பினர்களாகவும், மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில், காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உள்ளதாகக் கூறி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளர் ஏ.ஜி.மவுரியாவும், காவல் புகார் ஆணையங்கள் அமைக்கக் கோரி சரவணன் தட்சினாமூர்த்தி என்பவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகளை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி சுதந்திரமான நபர்களை ஏன் நியமிக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.

உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் அடங்கிய மாநிலக்குழு மற்றும் கலெக்டர், எஸ்.பி. ஆகியோர் அடங்கிய மாவட்ட குழுக்களை அமைத்த சட்டத்தை திருத்துமாறு போதிய அவகாசம் வழங்கியும் திருத்தவில்லை என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். உயர் அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால், அவர்களே எப்படி விசாரிப்பார்கள்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், புகார் ஆணையம் அமைத்த சட்டத்தின்படி சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்படி திருத்தம் செய்யாவிட்டால், அதை ரத்து செய்யப்போவதாக தெரிவித்த நீதிபதிகள், சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக பதில் தெரிவிக்க அரசுக்கு இறுதி அவகாசம் வழங்கி வழக்கை நாளை வரை ஒத்திவைத்தனர்.

Views: - 438

0

0