மக்கள் நலப் பணிகளில் நீங்களும் பங்களிக்க வேண்டுமா? அழைப்பு விடுக்கும் கோவை மாநகராட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan30 September 2021, 1:19 pm
கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நமக்கு நாமே திட்டத்தில் பங்கேற்று மக்கள் நல பணிகளை மேற்கொள்ள வாரீர் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது :-
தமிழக முதலமைச்சர் அவர்கள் மக்கள் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக வெற்றிகரமான திட்டமான நமக்கு நாமே திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உத்தரவிடப்பட்டு இத்திட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
நமக்கு நாமே திட்டத்தின் படி பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், நிறுவனங்கள், சி.எஸ்.ஆர் நிதி வழங்கும் நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் உள்ளிட்டோர் ஒரு பங்கு நிதி அளித்தால் அரசு சார்பில் கூடுதலாக இரு பங்கு நிதி வழங்கப்பட்டு மக்கள் பரிந்துரைக்கும் சிறப்பு நலப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தின்படி பல்வேறு அடிப்படை கூட்டமைப்பு பணிகளான பொதுமக்களுக்கான பூங்கா உள்ளிட்ட வசதிகள், நீர்நிலைகள் புனரமைத்தல், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மேம்பாடு, மரக்கன்று நடுதல், நவீன தெருவிளக்கு அமைத்தல், விளையாட்டு மைதானங்கள், நூலகங்கள், சுகாதார நிலையங்கள், மின் மயானங்கள், சாலைகள், பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளலாம்.
இத்திட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தாங்கள் செயல்படுத்த விரும்பும் மக்கள் நல திட்டத்தை தேர்வு செய்து அதற்கான விண்ணப்பத்தை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் அல்லது மாநகர பொறியாளரிடம் வழங்கலாம்.
மேலும் விபரங்களுக்கு மாநகர பொறியாளரை நேரிலோ அல்லது “81900 00200” என்ற தொலைபேசி எண்ணிற்கோ அல்லது “[email protected]” என்ற இமெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
0
0