குமரியில் மருத்துவர் தற்கொலை விவகாரம் : பரபரப்பான ஆடியோ சிக்கியது!!

1 November 2020, 1:43 pm
Nagercoil Doctor Suicide- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : குமரி டாக்டர் தற்கொலை வழக்கில் போலீசார் வெள்ளைத்தாளில் சாட்சி கையெழுத்து பெற முயற்சிப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த பறக்கை, இலந்தவிளை பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சிவராம பெருமாள் 42. பறக்கையில் மருத்துவமனை நடத்தி வந்தார். குமரி கிழக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி மாவட்ட இணை அமைப்பாளராகவும் இருந்தார்.

இவரது மனைவி டாக்டர் சீதா அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 26ம் தேதி டாக்டர் சிவராம பெருமாள் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

அவரின், தற்கொலைக்கான காரணம் குறிப்பிட்டு அவர் எழுதிய கடிதம் மற்றும் நண்பர்களிடம் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் எழுதிய கடிதத்தில் கன்னியாகுமரி பாஸ்கரன், இலந்தைவிளையை சேர்ந்த விஜய ஆனந்த் ஆகியோர் தான் தனது மரணத்திற்கு காரணம் என்று கூறியிருந்தார்.

குமரி டிஎஸ்பி பாஸ்கரன் சிவராம பெருமாளை அவரது குடும்பத்தினர் முன்னிலையில் அவதூறாக பேசியதாக பெரும் மன உளைச்சலில் சிவராம பெருமாள் தற்கொலை செய்துள்ளார். இதுவே அவர் தற்கொலை செய்ய காரணம் என உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால் டிஎஸ்பி தரப்பில் சிவராம பெருமாள் யார் என்றே தெரியாது என கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கண்ணன் என்பவரிடம் சம்பவம் நடைபெற்ற இடத்தில் வரைபடம் தயாரித்து சாட்சியாக கையெழுத்து பெற்ற காவல்துறையினர். அவரிடம் மேலும் ஒரு வெள்ளை பேப்பரில் கையெழுத்துப் போட்டுத் தரவேண்டும் என்று போனில் பேசி கேட்டுள்ளனர்.

ஏற்கனவே போட்ட கையெழுத்தை பரிசோதிக்க போவதாக போலீசார் அப்போது கூறியுள்ளனர். வழக்கில் ஏதேனும் குழப்பத்தை ஏற்படுத்த வெள்ளை பேப்பரில் கையெழுத்து பெற முயற்சி நடைபெறுவதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவருடன் பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், சுசீந்திரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் ஏடிஎஸ்பி மணிமாறன், ஏஎஸ்பி விஸ்வேஷ்  சாஸ்திரி ஆகியோர் வழக்கு விசாரணைக்காக மேற்கொண்டனர். இவர்கள் விசாரணை நடத்தி வந்தபோது வழக்கு விசாரணை மாவட்ட குற்றபிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் மூன்றாவது விசாரணை அமைப்பு இந்த வழக்கை தற்போது விசாரணை செய்கிறது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் எந்தவித முடிவும் காவல்துறையால் எட்டப்படவில்லை. இதிலும் ஏடிஎஸ்பி மணிமாறன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணையை மேற்கொள்ள இருக்கின்றனர். இன்று முதல் இந்த விசாரணை தொடங்குகிறது.

போலீசார் ஏற்கனவே டாக்டரின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு விட்ட நிலையில் அடுத்த டிஎஸ்பி பாஸ்கரன்,  விஜய ஆனந்த் உள்ளிட்டோர் இடம் விசாரணை நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Views: - 24

0

0