‘வரதட்சணை கொடுத்தால் என்னுடன் வாழலாம்‘: கணவனை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி!!
28 September 2020, 10:49 amகோவை : வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டத்தில் கொரோனா எதிரொலி காரணமாக , மக்கள் குறைகளை அவர்களது பகுதியிலுள்ள மணியகாரர் அலுவலகங்களில் புகாராக கொடுக்கலாம் என ஆட்சியர் அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு காரமடையச்சேர்ந்த சித்ரா(வயது 20) என்ற பெண் பெட்ரோல் கேனுடன் வந்துள்ளார்.
அப்போது காவலர்கள் சோதனை செய்வதை பார்த்ததும் , பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது. பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள், அவரை தடுத்து காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தாய், தந்தை, அண்ணன் இறந்த நிலையில் சித்ரா தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது காரமடையை சேர்ந்த கெளரி சங்கருக்கும் மற்றொரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில் , அப்பெண் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கெளரி சங்கருக்கும் , சித்ராவுக்கும் மூன்று மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 50,000 ரூபாய் வரதட்சணை கேட்டு சித்ராவை கெளரி சங்கர் அடித்து கையை உடைத்துள்ளார். பணம் இருந்தால் என்னோடு வாழ வா, என துன்புறுத்தியதால் ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்தவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. திருமணமான மூன்று மாதத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.