திமுகவில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பொறுப்புக்கு டிஆர் பாலுவின் மகன் நியமனம் : துரைமுருகன் அறிவிப்பு…

Author: kavin kumar
18 January 2022, 11:04 pm
Quick Share

சென்னை: தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக டி.ஆர்.பி.ராஜாவை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தமிழக நிதி அமைச்சரான பி.டி,.ஆர். பழனிவேல் தியாகராஜன் திமுகவில் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி. விங்) அணிச் செயலாளராக இருந்தார். அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டதால், திமுக ஐடி விங் பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் கட்சிப் பதவியிலிருந்து விலகப் போவதாகவும் இரண்டு மாதங்களுக்கு முன்பே, அந்த அணியின் கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு பழனிவேல் தியாகராஜன் முறைப்படி தனது கட்சிப் பணியை ராஜினாமா செய்து கட்சி தலைமைக்கு அனுப்பினார். ஆனால், கட்சி வற்புறுத்தலின் பேரில் தான் தனது பதவியை தியாகராஜன் ராஜினாமா செய்ததாகவும் அந்தப் பதவியில் டி.ஆர்.பி.ராஜாவை நியமிக்க முடிவு செய்ததால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக டி.ஆர்.பி.ராஜாவை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளருமான அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தி.மு.கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக, பணியாற்றி வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், அரசுப் பணிகளில் முழுக் கவனம் வேண்டியிருப்பதால், அப்பொறுப்பிலிருந்து செலுத்த விலகிக் கொள்வதாக, கழகத் தலைவரிடம் கொடுத்த கடிதத்தை ஏற்றுக் கொண்டு, அவரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, கழக சட்டதிட்ட விதி: 31 – பிரிவு: 19-ன் படி அவருக்கு பதிலாக கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக டி.ஆர்.பி. ராஜா, எம்.எல்.ஏ., (எண். 1202, 6வது அவென்யூ, ‘இசட்’ பிளாக், அண்ணா நகர், சென்னை – 600 040.) அவர்கள் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுவார்கள்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 261

0

0