கோவையில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: நைஜீரிய இளைஞரை 3 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..!!

Author: Rajesh
3 August 2021, 10:54 am
Quick Share

கோவை: தடை செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்திய கடத்தல் மன்னனான நைஜீரிய இளைஞரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவுக்கு கோவை இ.சி. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் சென்னை மண்டல அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், டெல்லியில் இருந்து கேரளா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவை ரயில் நிலையத்தில் கடந்த 19ம் தேதி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, ரயில் நிலைய நடைமேடையில் இருந்த நைஜீரிய இளைஞரின் உடைமைகளை மதுரை மண்டல போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை செய்தனர். அப்போது, ரூ.1.10 கோடி மதிப்புள்ள 2.23 கிலோ ‘ஆம்பிடமைன்’ என்ற போதைப்பொருளை அவர் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, நைஜீரியாவை சேர்ந்த எட்வின் கிங்க்ஸ்லி (26) என்பவரை என்சிபி அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில், எட்வின் கிங்க்ஸ்லியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக் கோரி மதுரை மண்டல மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள இன்றியமையா பண்டகங்கள் சட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) கோவிந்தராஜன், நைஜீரிய இளைஞரை 3 நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

Views: - 315

0

0