போதையில் பாதை மாறி கிணற்றில் விழுந்த மதுப்பிரியர் : துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்!!

6 July 2021, 7:41 pm
Well Fall - Updatenews360
Quick Share

திருப்பூர் : மது போதையில் கிணற்றில் தவறி விழுந்த நபரை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்ட சம்பவம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

திருப்பூர் அனுப்பர்பாளையம், கோகுலம் காலனியில் வசித்து வருபவர் படையப்பன் (வயது 21) இவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று மாலை கோகுலம் காலனி அருகே உள்ள பயன்பாட்டற்ற கிணறு அருகே தனது நண்பர்களுடன் மது அருந்த சென்றுள்ளார்.

போதை தலைக்கேறிய நிலையில் அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனை கண்ட அவரது நண்பர்கள் உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் போராடி படையப்பனை உயிருடன் மீட்டனர். படையப்பன் கிணற்றில் விழுந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சேர 30 நிமிடங்கள் வரை ஆன நிலையில் போதையில் இருந்த படையப்பன் மூர்ச்சையாகி கிணற்றில் மூழ்க துவங்கியுள்ளார்.

சரியான நேரத்தில் தீயணைப்பு துறையினர் வந்ததுடன் விரைந்து செயல்பட்டதால் இளைஞரை உயிருடன் மீட்டனர். தீயணைப்புத் துறையினரின் துரிதமான செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Views: - 281

0

0