போதையில் குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்த ஆசாமி… தடுத்த தலைமை ஆசிரியருக்கு முகத்தில் குத்து… அரசு பள்ளியில் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
15 June 2022, 3:38 pm
Quick Share

வேலூர் : மதுபோதையில் பள்ளிக்குள் நுழைந்து குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுக்க முயன்ற நபரை தடுத்த தலைமை ஆசிரியரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் அடுத்த பெருமுகை பகுதியிலுள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி செல்வராஜ் மதுபோதையில் வந்து வகுப்பறையில் உள்ள குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுக்க முயன்றுள்ளார். அதை ஆசிரியர்கள் தடுத்தபோது செல்வராஜ் ஆசிரியர்களிடம் கலாட்டா செய்துள்ளார். அப்போது, மாணவர்கள் அலறி கூச்சலிட்டுள்ளனர்.

தகவலறிந்த தலைமையாசிரியர் பால்ராஜ், கலாட்டா செய்து கொண்டிருந்த செல்வராஜை பள்ளியை விட்டு வெளியே செல்லும் படியும் மாணவர்கள் பயப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார். வெளியே செல்லாத செல்வராஜ் தலைமையாசிரியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

அதில், தலைமையாசிரியர் அணிந்திருந்த கண் கண்ணாடி உடைந்து முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் பால்ராஜ் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் செல்வராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளிக்குள் நுழைந்து தலைமை ஆசிரியரை போதை ஆசாமி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 516

0

0