போலீஸில் புகார் அளித்த மாமியார் ; நடுரோட்டில் படுத்து போதை ஆசாமி ரகளை… போலீசாரின் பொறுமையை சோதித்த சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
9 November 2022, 11:37 am
Quick Share

விருத்தாசலம் காவல் நிலையம் முன்பு மது போதையில் ரகளையில் ஈடுபட்ட நரிக்குற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த பழனிவேல் மகன் அருள்பாண்டிதேவ் (என்கிற) போண்டா (32) என்பவர் மது போதையில் தனது மகள் மற்றும் தன்னை தாக்கியதாக விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அருள்பாண்டிதேவின் போண்டாவின் மாமியார் புகார் கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் மகளிர் போலீசார் அருள்பாண்டிதேவ் -வை விசாரணைக்காக வரவழைத்தனர். அப்போது, அருள்பாண்டி தேவ் அதிக மது போதையில் மகளிர் காவல் நிலையத்தில் போலீசாரிடம் வந்து அலப்பறையில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அருகிலுள்ள விருத்தாசலம் காவல் நிலையத்தில் அருள்பாண்டிதேவ்வையும் அவர் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தையும் ஒப்படைத்தனர்.

தலைக்கு ஏறிய மது போதையில் இருந்ததால் அருள்பாண்டிதேவை காவல்துறையினர் வாகனத்தை விட்டு விட்டு வீட்டுக்கு போகும்படி அறிவுரை கூறினர். இதனை ஏற்காத அருள்பாண்டிதேவ் சாலையின் குறுக்கே படுத்து தனது வண்டியை கொடுக்க வேண்டும் எனத் தகராறில் ஈடுபட்டார். இல்லையென்றால் நடப்பது வேறு என்று போலீசாரை எச்சரித்து காவல்துறையிடம் அலப்பறையில் ஈடுபட்டார்.

இதனால், செய்வது தெரியாமல் திகைத்துப் போன போலீசார் ஒரு கட்டத்திற்கு மேல் இருசக்கர வாகனத்தை அருள் பாண்டிதேவிடம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Views: - 187

0

0