வடமாநிலத்தவர்கள் வருகையால் எங்களுக்கு வேலை இல்ல.. வாழ்வாதாரம் போச்சு.. பெயிண்டர்கள் சங்கம் போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2023, 5:15 pm
Cbe Painter Designer - Updatenews360
Quick Share

வட மாநிலத் தொழிலாளர்களின் வருகையால் தமிழக தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனை தடுக்க கோரியும் கோயமுத்தூர் ஸ்மார்ட் பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் மற்றும் டிசைனர்கள் நல சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இச்சங்கத்தின் தலைவர் திருக்கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இச்சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள், வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்திற்கு பெருமளவு வருகை புரிவதால் தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், வட மாநில தொழிலாளர்கள் தமிழ் மக்கள் ஒப்பந்தம் செய்யும் தொகையினை விட குறைவான தொகைக்கு வேலை செய்வதால் தமிழர்களின் வேலை பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

மேலும் பல இடங்களில் தங்களது வேலை வாய்ப்பினை பறித்துகொண்டு வடமாநில தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே தமிழ்நாட்டில் இனிவரும் காலங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் அனைத்திலும் தமிழர்களுக்கு 90% வேலை வாய்ப்பினை வழங்க சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே வட மாநில தொழிலாளர்கள் இங்கு தங்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் குடும்ப அட்டை, ஓட்டுரிமை கொடுக்கக்கூடாது எனவும் இதனை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

Views: - 270

0

0