‘ கலைஞருக்குப் பிறகு நான் தான்”.. எச்சரிக்கை இருந்தும்.. துரைமுருகன் பதில்!
Author: Hariharasudhan7 November 2024, 5:01 pm
ஆளுநர், தான் யார் என்பதை அவ்வப்போது காட்டிக் கொண்டே இருப்பார் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலையில்முதல்வரின் முகவரி துறையின் கீழ், காட்பாடி சட்டமன்றத் தொகுதி மக்களுடன், முதல்வர் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு, சுமார் 10 கோடியே 91 லட்சம் மதிப்பிலான நலத் திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, காட்பாடி ஒன்றிய பெருங்குழு தலைவர் வேல்முருகன், வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதனையடுத்து, அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது, ஆளுநர் மாளிகை தரப்பில், சத் பூஜை திருநாளுக்கு இந்தியில் வாழ்த்து தெரிவித்திருந்தது குறித்து கேட்டதற்கு, அவர், தான் யார் என்பதை இதன் மூலம் நிருபித்துக் கொண்டிருக்கிறார் எனக் கூறினார்.
முன்னதாக, நிகழ்வில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “தமிழக சட்டமன்றத்தில் கருணாநிதி 56 ஆண்டுகள் இருந்தார். அதற்கு பிறகு நான் தான் 53 ஆண்டாக உள்ளேன். தொகுதியை நான் கோயிலாக பார்ப்பதால், மக்கள் என்னை வெற்றி பெற வைக்கிறார்கள்.என் கட்டை கீழே விழுகிற வரை காட்பாடி தொகுதிக்காக பாடுபடுவேன். மற்ற தொகுதியை ஒப்பிட்டு பாருங்கள், நான் செய்த செயல்கள் தெரியும்.
இதையும் படிங்க: விஜய்க்கு அழைப்பா? ராமதாஸ் வெளியிட்ட ரகசியம்!
எனக்கு உள்ள சீனியாரிட்டி, தலைவரிடத்தில் (ஸ்டாலின்) எனக்கு உள்ள நெருக்கம் காரணமாக, இவற்றைச் செய்து வருகிறேன். திடீரென மழை வருகிறது, மழை பெய்யப் போகிறது எனச் சொல்லி விடுகின்றனர். முதல்வர் உடனே எங்களை ஆய்வுக்குப் போகச் சொல்கிறார். இன்றும் எனக்கு பருவமழை தொடர்பாக ஆய்வு இருந்தது. ஆனாலும், உங்களைப் பார்க்கவே வந்துள்ளேன்” எனக் கூறினார்.