கழிவுநீர் தொட்டியில் கசிந்த விஷவாயு…3 தொழிலாளர்கள் பரிதாப பலி: சாயபட்டறை உரிமையாளர் கைது..!!
Author: Aarthi Sivakumar15 November 2021, 11:43 am
திருப்பூர்: வித்யாலாயம் பகுதியில் உள்ள தனியார் சாயப்பட்டறையில் கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்ட விஷவாயு தாக்குதலி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலை வித்யாலயம் அருகே உள்ள கொத்துக்காடு தோட்டம் பகுதியில் பேன்டோன் டையர்ஸ் என்ற சாய ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று ராமகிருஷ்ணன், வடிவேல் , நாகராஜ் ஆகிய 3 பேர் சாய ஆலை கழிவு தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென வடிவேலு என்ற நபருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே உள்ளே இருந்தவர்கள் சத்தம் போட்டவுடன் வெளியில் இருந்த நிறுவனத்தின் மேலாளர் தினேஷ் என்பவரும் , நிறுவனத்தின் எலக்ட்ரிஷியன் ராஜேந்திரன் என்பவரும் காப்பாற்றச் சென்றுள்ளனர்.
இதில் விஷவாயு அதிகமாக தாக்கி வடிவேலு என்ற தொழிலாளரும் , காப்பாற்றச் சென்ற மேலாளர் தினேஷ் என்ற நபரும் உயிரிழந்தனர். நாகராஜ், ராமகிருஷ்ணன், ராஜேந்திரன் என்ற 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ராஜேந்திரன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. காவல்துறை துணை ஆணையர் அரவிந்த் தலைமையிலான போலீஸார் சாய ஆலை உரிமையாளர் தனலட்சுமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இறந்தவர்களின் உறவினர்கள் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடலை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் திருப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0