கம்பியில் காய போட்டிருந்த துணியை எடுத்த போது மின்சாரம் தாக்கி கணவன் பலி : காப்பாற்ற முயன்ற மனைவி, மகள் காயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2021, 7:26 pm
Triupur EB Shock - Updatenews360
Quick Share

திருப்பூர் : மின்சாரம் தாக்கியதில், பனியன் தொழிலாளி உயிரிழந்த நிலையில் காப்பாற்ற முயன்ற மனைவி, மகள் காயமுற்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் – வெள்ளிங்காடு, கே.எம் நகரில் வசித்து வருபவர் மோகன். இவரது மனைவி சுசீலா. மகள் பவித்ரா. இந்நிலையில் இன்று காலை பனியன் தொழிலாளியான மோகன் வேலைக்கு செல்வதற்காக வீட்டின் வெளியில் காயப்போட்டிருந்த துணியை எடுக்க சென்ற போது, மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.

துணி எடுக்க சென்ற கணவரை நீண்ட நேரம் காணாததால் அவரது மனைவி சுசீலா மற்றும் மகள் பவித்ரா வெளியே வந்து பார்த்துள்ளனர். கணவரை காப்பாற்ற முயன்ற போது அவர்களும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர்.

இதனை தொடர்ந்து சுசீலா, பவித்ரா ஆகியோர் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் விசாரணையில், மோகனின் ஓட்டு வீடானது, இரும்பினால் அமைக்கப்பட்டுள்ளது.

அதில் மின் கம்பம் சாயாமல் இருக்கும் பக்கவாட்டு கம்பி இரும்பு சட்டத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும், சமீபத்தில் மழையின் காரணமாக மின்சாரமானது இரும்பு சட்டத்தின் வழியே துணி காய போடும் கம்பியின் வழியாக பாய்ந்ததில் இச்சம்பவம் நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Views: - 624

0

0