பாபர் மசூதி இடிப்பு வழக்கு எதிரொலி : கோவையில் போலீசார் பலத்த பாதுகாப்பு!!

30 September 2020, 11:23 am
Police Security - updatenews360
Quick Share

கோவை : பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் கோவையில் 935 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ காவல்துறையினர் தரப்பில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய 17 பேர் இறந்து விட்டதால், மீதி 32 பேர் மீது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இறுதி தீர்ப்பு இந்த வழக்கில் இன்று வழங்கப்படுகிறது.

இந்த தீர்ப்பையொட்டி நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கருதி, அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கோவை உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவை மாநகரை பொறுத்தவரை ரயில் நிலையம், உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் சாலை பேருந்து நிலையங்கள் உட்பட உக்கடம், ஆத்துப்பாலம், டவுன் ஹால் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே உள்ள 11 சோதனைச் சாவடிகள் உடன் கூடுதலாக 10 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு நகருக்குள் நுழையும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மாநில எல்லையில் கேரளாவில் இருந்து கோவை வரும் வழித்தடங்களில் பாதுகாப்பு மற்றும் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது.

Views: - 10

0

0