பொதுமக்கள் போராட்டம் எதிரொலி : கோவையில் ஆக்கிரமிக்கப்பட்ட நீர் வழிப்பாதைகளுக்கு வழி கொடுத்த வருவாய் அதிகாரி..!

8 July 2021, 8:48 pm
Cbe RI Officer - Updatenews360
Quick Share

கோவை : கோவை அசோகபுரம் ஊராட்சியில் தனியார் தொழிற்சாலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர் வழிப்பாதைகளை மாவட்ட வருவாய் அதிகாரி ரவிச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். உடனடியாக ஆவணங்களின் படி நில அளவை செய்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோவை அசோகபுரம் உராட்சிக்கு உட்பட்ட கணேஷ் நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் நீர் வழிப்பாதையை தனியார் நில உரிமையாளர்கள் ஆக்கிரமித்ததால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நீர் புகும் என அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக வருவாய்துறை அதிகாரிகளால் அந்த பள்ளம் மீட்கப்பட்டது.

இந்நிலையில் அதே நீர்வழிப்பாதையில் தொடர்ச்சியாக பல இடங்களில் பல்வேறு நில உரிமையாளர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தினர் ஆக்கிரமித்தும், நீர்வழிப்பாதையினை அடைத்தும் உள்ளதால் நீர் செல்லமுடியாமல் உள்ளதாக அசோகபுரம் ஊராட்சி சார்பில் வருவாய் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் இன்று அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாவட்ட வருவாய் அதிகாரி ரவிச்சந்திரன், துணை உள்ளாட்சிகள் இயக்குநர் மதுரா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயஸ்ரீ, லதா, வருவாய் அலுவலர் கண்ணகி, கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகா, ஊராட்சி தலைவர் ரமேஷ், துணைத் தலைவர் ஆடிட்டர் சண்முகசுந்தரம், கவுன்சிலர் பார்த்திபன், சுதாகர், ஊராட்சி செயலர் உள்ளிட்டோர் நீர்வழிப்பாதையினை ஆய்வு செய்தனர்.

அப்போது மாற்றுவழியில் கொண்டு செல்ல வாய்ப்புள்ளதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் நீர்வழிப் பள்ளங்களை ஆக்கிரமித்துள்ள இடங்களை ஆவணங்களைக் கொண்டு சரிபார்த்தனர்.

தொடர்ந்து அதே நீர்வழிப்பாதையில் உள்ள தனியார் நிறுவனங்களிலும் எந்த அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பதனையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து ஆவணங்களை மூலம் இந்த நீர்வழிப் பாதையை நில அளவை செய்து தனியார் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர்வழிப்பாதையை மீட்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.

Views: - 90

0

0