விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

7 July 2021, 7:53 pm
Quick Share

மதுரை: தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொள்கிறார்கள் என்றால் அது அதிமுகவுக்கு மகிழ்ச்சியும், பெருமையும் தரக்கூடியதாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

மதுரை பரவையில் உள்ள தனியார் மகாலில்  மாநகர் மாவட்ட பரவை பேரூராட்சி  அதிமுக சார்பில் உள்ளாட்சித்தேர்தல் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.  இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். ஆலோசனைக் கூட்டத்தில் பரவை ராஜா  உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில்,”ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ரேவதி மதுரைக்காரர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழர்கள் அதிகளவில் ஒலிம்பிக்கில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக தடகள வீரர்கள் இந்த ஆண்டு அதிக அளவில் கலந்து கொள்வது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியவர்.மாவட்ட அளவில், மாநில அளவில் உலக தரத்திலான விளையாட்டு மைதானங்களை ஏற்படுத்திக் கொடுத்தவர்.விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொள்கிறார்கள் என்றால் அது அதிமுகவுக்கு மகிழ்ச்சியும், பெருமையும் தரக்கூடியதாக உள்ளது. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறக்கூடியவர்களுக்கு மூன்று கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கக் கூடியது.

தமிழகத்திலிருந்து ஒலிம்பிக் போட்டிக்கு சென்றவர்களுக்கு 3 கோடி ரூபாய் கிடைத்தால் எங்களுக்கு மகிழ்ச்சி. அதுவும் மதுரை பெண்ணுக்கு கிடைத்தால் கூடுதல் மகிழ்ச்சி.மதுரை வீராங்கனை ரேவதி வீரமணிக்கு மறைந்த என்னுடைய மகனின் பெயரால் நடத்தப்பட்டுவரும் ஆர் ஜே தமிழ் மணி டிரஸ்ட் மூலம் உதவிகளை அவருடைய பயிற்சியாளர் மூலம் வழங்கியதோடு அந்தப்பெண் என்னை சந்தித்து பல்வேறு பாராட்டுதல்களை பெற்றுள்ளார். எனவே அவர் வெற்றி பெற்றால் அது எங்களுக்கு பெருமை தரக்கூடியது.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் தடுப்பூசி இருப்பு குறைந்த அளவே உள்ளது.ஆளுங்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் தொகுதிக்கு அதிக அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் தடுப்பூசி குறைந்தளவே வழங்கப்படுகிறது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் கண்காணிக்க வேண்டும். நல்ல பெயர் வாங்க வேண்டும் என இவ்வாறு செயல்படும் அதிகாரிகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் நாங்கள் மக்கள் வெறுப்பை சம்பாதிக்கவில்லை. 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் மக்கள் முகம் சுளிக்கும் வகையில் நாங்கள் செயல்படவில்லை.

மக்கள் அனைவரும் உங்களுக்குத்தான் வாக்கு செலுத்தினோம் எவ்வாறு பின்னடைவை சந்தித்தீர்கள் இன்று எங்களைப் பார்த்து கேட்கிறார்கள். நண்பர்களாக இருப்பவர்களை எப்போதும் நாங்கள் விட்டுக்கொடுப்பதில்லை. கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இப்போது அவர்களை விமர்சனம் செய்ய தயாராகவும் இல்லை.திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடும் வகையில் தான் செயல்படுகிறது.வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என தேர்தல் நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை  கொடுத்த திமுகவை நம்பி மக்கள் வாக்களித்தனர்.

தற்போது திமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மேகதாது அணையை இந்த அரசு கட்ட முடியாத அளவுக்கு செய்ய வேண்டும். திமுகவினர் உடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்களுக்கு முதல்வர் ஆலோசனை கொடுத்து நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை வலியுறுத்த வேண்டும். மக்கள் விரோத நடவடிக்கையை கர்நாடக அரசு எடுத்தால் அதை தடுக்கின்ற பணியில் தமிழக அரசு செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

Views: - 129

0

0