“வீடியோ காலில் வந்த ஸ்டாலின் களத்தில் வரக்காரணமே எடப்பாடியார்தான்“ : அமைச்சர் செல்லூர் ராஜு!!
27 November 2020, 5:08 pmமதுரை : முதலமைச்சர் ஆய்வு செல்ல சென்றதால்தான் ஸ்டாலின் களத்தில் குதித்து ஆய்வு செய்ய வந்தார் என்று அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.
மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “முதல்வரின் தீர்க்கமான நடவடிக்கையால் நிவர் புயல் பாதிப்பு இல்லாமல் சென்றுள்ளது, நிவர் புயலில் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காக்க பெற்றுள்ளது, புயலையும் பொருப்படுத்தாமல் முதல்வர் குடையை பிடித்து கொண்டு நேரில் ஆய்வு சென்றார்.
ஆனால் ஸ்டாலின் ஆய்வு விளம்பரம் தேடுவதாக மட்டுமே இருந்தது, முதல்வரின் நடவடிக்கையால் வீடியோ கான்பிரன்ஸில் இருந்த ஸ்டாலின் நேரில் ஆய்வுக்கு வந்துள்ளார். புயலை வைத்து திமுக விளம்பரம் தேடி வருகிறது.
சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் எவ்வாறு பிரச்சாரம் செய்வார் என தெரியவில்லை, குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போல ஸ்டாலின் உதயநிதியை விட்டு அரசியல் ஆழம் பார்க்கிறார், திமுகவில் உதயநிதி கட்டாயமாக திணிக்கப்படுகிறார். திமுக நாடக கோஷ்டி போல ஆகி விட்டது.
தமிழக மக்கள் போலியை நம்பி வாக்களிக்க மாட்டார்கள், திமுக ஆட்சி காலத்தில் புயலின் போது செய்த உதவிகளை ஸ்டாலின் எண்ணி பார்க்க வேண்டும். முதல்வர் ஏழை, எளிய மக்களுக்கு அள்ளி கொடுப்பவர். நிதி இருந்தால் முதல்வர் மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார், ஸ்டாலின் சொல்லி நிதியை கொடுக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என கூறினார்.
குடிமரமத்து பணியால் தமிழகத்தில் வெள்ளம் சூழவில்லை, 2015 ஆம் ஆண்டை விட தற்போது மழை அதிகம் பெய்துள்ளது, தமிழக அரசின் நடவடிக்கையை மக்கள் பாராட்டி வருகின்றனர், மழை நீர் வீணாக கடலில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, செம்பரம்பாக்கம் ஏரியை முதல்வர் பாதுகாத்து உள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பிரதமரின் கருத்தாகும், பிற மாநிலங்களை விட தமிழகத்தில் வேளாண் பொருட்களுக்கு குறைவாக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது, வேளாண் சட்டங்களுக்காக எதிர்கட்சிகள் நடத்திய போராட்டங்களை மக்கள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. 7 பேர் விடுதலை தொடர்பாக திமுக ஆளுநரை சந்தித்தது நாடகத்திலும் நாடகம், திமுக ஆட்சி காலத்தில் நளினியை தவிர அனைவரையும் தூக்கில் போட வேண்டும் என சொன்னார்கள்.
திமுக என்பது தமிழ் விரோத கட்சி, திமுகவில் மட்டுமே தாத்தா முதல் பேரன் வரைக்கும் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையான திமுகவினர் மனம் வெதும்பி உள்ளனர், அண்ணா தொடங்கிய திமுக குடும்ப கட்சியாக மாறி உள்ளது.
நாலு வரியை படிக்க தெரியாதவர் ஸ்டாலின், கலைஞரின் மூளை ஸ்டாலினினுக்கு இல்லை, கலைஞரின் மூளை மு.க.அழகிரியிடம் உள்ளது, அப்பா வளரத்த கட்சி இப்படி ஆகி விட்டதே என மு.க.அழகிரி மனம் வெதும்பி உள்ளார்” என கூறினார்
0
0