14 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட யானை : பத்திரமாக வனப்பகுதியில் விடப்பட்டது!!

20 November 2020, 11:39 am
elephant Saved - Updatenews360
Quick Share

தருமபுரி : பஞ்சப்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானை 14 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டு பத்திரமாக வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே ஏழுகுண்டூர் கிராமத்தில் உணவைத் தேடி வந்த யானை விவசாய நிலத்தில் உள்ள 50 அடி ஆழத்தில் நேற்று அதிகாலை தவறி விழுந்தது. இதனை மீட்க நேற்று அதிகாலை 4 மணி முதல் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பல்வேறு முயற்சிகள் செய்து யானைக்கு இரண்டு மயக்க ஊசி செலுத்தி யானையை மீட்க முயன்றனர்.

ஆனால் யானை மயக்க நிலை அடையாததால் மீண்டும் மூன்றாவது முறையாக கால்நடை மருத்துவர் மயக்க ஊசி செலுத்திய பிறகு யானை மயக்க நிலையை அடைந்தது. அதன் பிறகு மீட்பு குழுவினர் கிணற்றுக்குள் ராட்ஷத கிரேன் மூலம் இறங்கி யானையை சுற்றி பெல்ட் மற்றும் கயிறு மூலமாக கட்டி மேலே எடுக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக யானையின் மீது கட்டப்பட்ட கயிறு நழுவி கிணற்றின் பக்கவாட்டில் விழுந்தது. இதனை தொடர்ந்து யானை மீண்டும் கிணற்றுக்குள் விழாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டு யானையை மேலே கொண்டு வரும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.

14 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு யானையை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட யானைக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர். தற்போது நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்த வனத்துறையினர், யானையை பத்திரமாக மாரண்ட அள்ளி அருகே காப்புக்காட்டில் விட்டனர். தொடர்ந்து யானையை ஒரு குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

Views: - 15

0

0