யானையின் மீது எரியும் டயரை வீசிய இருவர் கைது : அதிகபட்ச தண்டனை வழங்க விலங்குகள் நல ஆர்வலர் வலியுறுத்தல்
22 January 2021, 6:55 pmநீலகிரி : எரியும் டயரை வீசியதால் காதுப் பகுதிகளில் காயமடைந்த காட்டு யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் காதில் ஏற்பட்டிருந்த தீக்காயத்துடன் சுற்றித்திரிந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக கடந்த 19ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. ஆனால், லாரியில் ஏற்றப்பட்டு முதுமலை முகாமுக்கு கொண்டுச் செல்லும் வழியில் காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து, யானையின் உடலுக்கு 21ம் தேதி உடற்கூராய்வு செய்யப்பட்டது.
இதில், யானையின் காது பகுதியில் தீ வைக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. தீ காயத்தால் யானையின் காதில் உள்ள நரம்புகள் அறுபட்டு அதிலிருந்து ரத்தம் வெளியேறியது கண்டறியப்பட்டுள்ளது. ரத்தம் அதிகளவில் வெளியேறியதால் அனீமியா ஏற்பட்டு, யானை உயிரிந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து யானை சுற்றியிருந்த பகுதிகளில் வனத்துறையினர் சிறப்பு குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை மசனகுடி பகுதியில் விசாரணை மேற்கொண்டபோது, ஊருக்குள் உணவு தேடி வந்த காட்டு யானை மீது, இருசக்கர வாகனத்தின் டயரில் தீ வைத்து யானை மீது வீசியது தெரியவந்தது இதனையடுத்து, அங்கு இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், மசினகுடி பகுதியைச் சேர்ந்த ரெசார்ட் உரிமையாளர் ரைமன் மற்றும் அவரது நண்பர் பிரசாந்த் ஆகியோரை பிடித்து வனத்துறை அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உணவு தேடி பிரசட் பகுதிக்குள் வந்த காட்டு யானை மீது டயரில் தீ பற்ற வைத்து வீசியது வீசி அதை ஒப்புக் கொண்டனர். பின்னர், அவர்களை கைது செய்த வனத்துறையினர் அவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, கடந்த வாரம் 3ம் தேதி இரவு மாவநல்லா பகுதிக்குள் வந்த யானை மீது டயரில் தீ பற்ற வைத்து யானை மீது அவர்கள் வீசும் செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் கிராமத்துக்குள் வந்த யானையை விரட்ட இருசக்கர வாகனத்தின் டயரில் தீ பற்ற வைத்து யானை மீது வீசுவதும், கொளுந்துவிட்டு எரியும் தீயினால் யானை வலியால் துடித்து ஓடுவதும் காட்சிகள் காண்போரை பதைபதைக்கச் செய்தது.
இது குறித்து ஒரு விலங்குகள் நலஆர்வலர்கள் கூறுகையில், “இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது அதிக பட்ச தண்டனை வழங்கும் சட்டப் பிரிவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது போன்ற நபர்களை வனத்துறை பிணையில் வெளியில் வர முடியாத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என கோரிக்கை வைத்தனர்.
0
0