புதருக்குள் குட்டியை ஈன்ற தாய் யானை : இடையூறாக இருந்த புதர்களை அகற்றி அழைத்து சென்ற அழகிய காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan10 August 2021, 8:16 pm
நீலகிரி : குன்னூர் அருகே தனியார் தேயிலை எஸ்டேட்டில் யானை கூட்டத்தில் இருந்த ஒரு பெண் யானை குட்டி ஈன்ற பின் குட்டி செல்ல வழி ஏற்படுத்தி அழைத்து சென்ற காட்சி அனைவரையும் நெகிழ செய்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து காணபடுகிறது. குறிப்பாக குன்னூர் வன பகுதிக்கு வந்துள்ள யானைகள் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு வருகின்றன.
இந்த நிலையில் குன்னூர் அருகே சேலாஸ் பகுதிக்கு வந்துள்ள 6 யானைகள் கொண்ட ஒரு யானை கூட்டம் 3 நாட்களாக தனியார் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு உள்ளன. இந்த யானை கூட்டத்தால் தேயிலை பறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த யானை கூட்டத்தில் கருவுற்றிருந்த ஒரு பெண் யானை புதர் மறைவில் குட்டி ஈன்றுள்ளது. புதரில் குட்டி ஈன்ற நிலையில் குட்டி யானையால் புதருக்குள் எழுந்து நடக்க முடியவில்லை.
இதனை அறிந்த தாய் யானை, இடையூறாக இருந்த புதர்களை அகற்றி பாதை அமைத்து குட்டியை மெல்ல மெல்ல தேயிலை தோட்டத்திற்குள் அழைத்து வந்தது.
மேலும் குட்டி நடந்து செல்ல வழியில் இருந்த குச்சிகளையும் தனது தும்பி கையால் தூக்கி வீசியவாறு அழைத்து சென்றது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலை தலங்களில் வைரலாக பரவி வருகிறது.
0
0