இன்று தொடங்குகிறது தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாம்: பாகன்களுடன் முகாமை வந்தடைந்த யானைகள்..!!

8 February 2021, 12:33 pm
elephant camp - updatenews360
Quick Share

கோவை: கோவையில் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று தொடங்குகிறது. பாகன்களுடன் யானைகள் முகாமை வந்தடைந்தன.

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் தெய்வானை, கஸ்தூரி, ஆண்டாள், லட்சுமி, கோமதி, பார்வதி என ஒரு பட்டாளமே இங்கு கூடியுள்ளது. இனி அவற்றின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் குறும்புகளுக்கு பஞ்சமிருக்காது. கோவையில் இன்று யானைகள் புத்துணர்வு முகாம் தொடங்குகிறது. கோவை தேக்கம்பட்டியில் உள்ள பவானி ஆற்றங்கரை தயாராகிவிட்டது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அணைத்து கோவில் யானைகளும் அந்தந்த கோவில்களின் சிறப்பு பூஜைக்கு பின்னர் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.

தத்தமது பாகன்களுடன் ஒன்றன் பின் ஒன்றாக யானைகள் முகாமை வந்தடைந்தன. தொடர்ந்து 9வது ஆண்டாக நடைபெறும் புத்துணர்வு முகாமில் ஒவ்வொரு யானைகளும் எடை பார்க்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டன. அடுத்த 48 நாட்களுக்கு புத்துணர்வு முகாமில் யானைகள், பாகன்களுக்கு முதலில் கொரோனா பரிசோதனை சான்று சரி பார்க்கப்பட்டது. இந்த முகாமில் 21 யானைகள் பராமரிக்கப்படவுள்ளன. யானைகளுக்கான கொட்டகைகள், பாகன்கள் தங்குமிடம், உணவுக் கூடம், யானைகள் குளிப்பதற்கு ஷவர் பாத் போன்ற அனைத்து ஏற்பாடுகளும் தயாராகிவிட்டது.

யானைகளுக்கு பிடித்தமான தீவனம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யானைகளின் எடைக்கேற்ப தீவனமும், உடற்பயிற்சியும் கொடுக்கப்படவுள்ளது. கூடுதல் எடையுடன் கொழுகொழுவென இருக்கும் யானைகளுக்கு ‘டயட்’ கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யானைகளை பராமரிக்க 3 பாகன்களும், உடல்நலனை கண்காணிக்க மருத்துவ குழுவினரும் உள்ளனர்.

முகாமில் உள்ள யானைகளின் வாசம் அறிந்து காட்டு யானைகள் முகாமுக்குள் நுழையாமல் தடுக்க மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரும்பு தடுப்புகள், தொங்கும் மின் வேலி, சோலார் மின்வேலியுடன் முகாமை சுற்றி கண்சிமிட்டும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கோவில் பணிகளை செய்து ஆசீர்வாதம் அளித்த யானைகளுக்கு புத்துணர்வு முகாமில் 48 நாட்களும் கொண்டாட்டம் தான்.

Views: - 0

0

0