குடியிருப்பில் தஞ்சமடைந்த ஒற்றை காட்டுயானை : அச்சத்தில் மக்கள்!!
27 August 2020, 11:42 amகோவை : பரலிக்காடு அருகே கடந்த ஒரு வாரமாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி வரும் ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பரலி மின்வாரிய குடியிருப்புக்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்தது. இதனை கண்ட மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அச்சமடைந்து வீட்டின் மேல்பகுதியில் ஏறிக்கொண்டனர். அந்த குடியிருப்பு முழுவதும் சுற்றி வந்த அந்த ஒற்றை ஆண் காட்டு யானை கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் தூக்கி வீசி சேதப்படுத்தியது.
குறிப்பாக வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை காலால் உதைத்து தும்பிக்கையால் இழுத்து கடுமையாக சேதப்படுத்தியது. இதனை அடுத்து அருகில் இருந்த பலா மரங்களை சேதப்படுத்த முயற்சி செய்தது.
பின்னர் அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் சப்தமிட்டு கூச்சல் அனுப்பியதால் அந்த யானை ஆக்ரோஷத்துடன் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.