புத்துணர்வு முகாமில் ‘என்ஜாய்’ செய்யும் யானைகள்: சகல வசதிகளுடன் சத்தான ஆகாரம்..!!

8 March 2021, 1:22 pm
elephant6 - updatenews360
Quick Share

மேட்டுப்பாளையம்: தேக்கம்பட்டி யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாமில் உள்ள யானைகள் பகல், இரவு பாராமல் ஓய்வெடுத்து வருகின்றன.

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கோவில் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் நடைபெற்று வருகின்றது.

வழக்கம் போல் இந்த ஆண்டு 13 வது ஆண்டு யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகில் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் கடந்த 8ம் தேதி தொடங்கியது. முகாமில் மொத்தம் 26 யானைகள் கலந்து கொண்டன. யானைகள்
சிறப்பு நல வாழ்வு முகாமில் கலந்து கொண்ட யானைகள் மிகவும் உற்சாகத்துடன் காணப்படுகின்றன.

தினசரி காலை யானைகள் நடைப் பயிற்சியை மேற்கொள்கின்றன. நடைப் பயிற்சிக்காக அமைக்கப் பட்ட 600 மீட்டர் சுற்றளவில் அமைக்கப்பட்ட நடைபாதையில் ஆடி அசைந்த படி யானைகள் நடந்து வருவது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. நடைப் பயிற்சிக்குப் பின்னர் குளியல் மேடை மற்றும் ஷவர் பாத்களில் யானைகள் குளிக்க வைக்கப்படுகின்றன. குளியல் மேடை மற்றும் ஷவர் பாத்களில் யானைகள் மகிழ்ச்சியுடன் குளித்து விளையாடி மகிழ்கின்றன.

அதன் பின்னர் யானைகளுக்கு உணவு வகைகள் பசுந் தீவனங்கள் கொடுக்கப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து யானைகள் அந்தந்த இடங்களில் கட்டப் படுகின்றன. அமைதியாக ஓய்வு எடுக்கும் யானைகள் தும்பிக்கையில் மன்ணை தனது உடல் மீது வாரி இறைந்து மகிழ்கின்றன. அதன் பின்னர் தமிழ்நாடு அரசு பராமரிப்புத் துறை மருத்துவர்கள் மற்றும் அரசு வன கால்நடை மருத்துவ அலுவலரால் தினசரி காலை யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தேவைக்கேற்றாற் போல் மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

யானைகளின் உடல் எடைக்கு ஏற்றாற் போல் நடைப்பயிற்சியும் சமச்சீர் உணவும் வழங்கப்பட்டு வருகின்றது. அதே போல் மாலை 4 .00 மணிக்குமேல் யானைகளுக்கு நடைபயிற்சி ஆனந்தக் குளியல் பசுந்தீவனம், அரிசி, பச்சைப்பயிறு, கொள்ளு , உப்பு, மஞ்சள் ஆகியவை கலந்த உணவும் ஆயுர் வேத மருந்துகளான அஷ்ட சூராணம், சவணபிராஷ், லீவ் – 52 மாத்திரைகள், பயோ பூஸ்ட் மாத்திரை, மல்டி வைட்டமின் மாத்திரைகள், மினரல் மிக்சர் ஆகியவை வழங்கப்படுகின்றன.

தேவைப்படும் யானைகளுக்கு மட்டும் சிறப்பு உணவு வகைகளாக பேரிட்சை, அவல், கேரட், பீட்ரூட் ஆகியவை வழங்கப்படுகின்றன. யானைகளுக்கு தினசரி காலை மாலை 2 நேரங்களும் நடைப்பயிற்சி ஆனந்தகுளியல் உணவு மற்றும் பசுந்தீவனங்களை வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் முகாமில் யானைகள் குதூகலத்துடன் காணப்படுகின்றன. முகாமில் யானைகள் ஒரு ஆண்டுக்குப் பின் சந்தித்த மகிழ்ச்சியில் தும்பிக்கையால் ஒன்றையொன்று தழுவி சங்கேத மொழியில் பேசிக்கொண்டன. மேலும் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கோவில் யானை ஆதிநாயகி,காலை மற்றும் இரவு நேரங்களில் கொரட்டை விட்டு அசந்து தூங்கி ஓய்வு எடுத்து வருகிறது.

Views: - 17

1

0