ஈமு கோழி மோசடி: 10 ஆண்டு சிறை, ரூ.2 கோடி அபராதம்…கோவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

Author: Aarthi Sivakumar
22 September 2021, 3:50 pm
Quick Share

கோவை: ஈமு கோழி மோசடி வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.2 கோடி அபராதம் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் குரு என்ற குரு சாமி. இவர் கடந்த 2010ம் ஆண்டு பெருந்துறையில் சுசி ஈமு பாம்ஸ் பிரவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை விளம்பரப்படுத்தியுள்ளார்.

முதல் திட்டத்தில் ரூ 1.50 லட்சம் பணம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழி குஞ்சுகள் தீவனம் செட் மருந்து மற்றும் பராமரிப்பு பணமாக மாதம் ரூ.6ஆயிரம் வருடம் போனசாக ரூ.20ஆயிரம் மற்றும் இரண்டு வருடம் கழித்து கட்டிய முழு பணமும் திருப்பி கொடுக்கப்படும். இரண்டாவது திட்டமான விஐபி திட்டத்தில் ரூ 1.50 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ. 7 ஆயிரம் போனசாக வருடத்திற்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என்றும் இரண்டு வருடம் கழித்து கட்டிய முழு பணமும் திருப்பி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஈமு கோழி

இதனை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 96 பேர் முதலீடு செய்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த 2012ஆம் ஆண்டு புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து குருசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, மோசடி செய்த குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.இரண்டு கோடியே 40 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் குருசாமி நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

Views: - 343

1

0