வழியும் நிலையில் பவானி.! உபரி நீர் திறக்க வாய்ப்பு!!

12 August 2020, 10:47 am
Sathy Bhavani Dam - Updatenews360
Quick Share

ஈரோடு : பவானிசாகர் அணை 102 அடியை எட்டவுள்ளதால் உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாக பில்லூர் அணை 97 அடியை எட்டியது இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து அனைத்தும் உபரி நீராக வெளியேற்றம் செய்யப்பட்டது.

இதன்காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து 30,000 கன அடி அதிகரித்து அணை 101 அடியை எட்டியது. தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்த காரணத்தினால் அணைக்கு வரும் நீர்வரத்து 5644 கன அடியாக குறைந்துள்ளது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101.10 அடியாகவும் நீர் இருப்பு 29.5 டிஎம்சி ஆகவும் நீர்வரத்து வினாடிக்கு 5644 கன அடியாகவும் உள்ளது. அரக்கன்கோட்டை தடப்பள்ளி வாய்க்காலில் 700 கன அடி நீரும் காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கும் 500 கன அடி நீரும் என 1200 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து 101 அடியை தாண்டியுள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் பவானிசாகர் அணை 102 அடி கொள்ளளவை எட்டினால் அணையில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 9

0

0