லாரி கவிழ்ந்து விபத்து : தமிழக கர்நாடக இடையே 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!!

26 August 2020, 1:42 pm
Sathy Traffic - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் அட்டை பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது திண்டுக்கல் மைசூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் மலைப்பாதை என்பதால் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து நடைபெறுவது வழக்கம்.

கடந்த சில நாட்களாக இம்மலைப்பாதை வழியாக அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் அனுமதிக்கப்படுகின்றது இதனால் திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் இன்று காலை கேரள மாநிலம் சுல்தான் பத்தேரியில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக பவானிசாகரில் உள்ள காகித ஆலைக்கு அட்டை பாரம் ஏற்றிக்கொண்டு லாரி வந்துகொண்டிருந்தது.

அப்போது ஆறாவது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்ப முற்பட்டபோது பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் தமிழகம் கர்நாடக மாநிலங்களில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் கிரேன் மூலம் லாரி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திம்பம் மலைப் பாதையில் தொடர்ந்து ஏற்படும் விபத்துகளை தடுக்க அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளை சோதனைச் சாவடியில் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.