பால் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.! கடம்பூர் விவசாயிகள் கோரிக்கை.!!

11 August 2020, 11:17 am
Sathy Diary Station - Updatenews360
Quick Share

ஈரோடு : கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பால் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைகிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் விவசாய பணி மற்றும் கரவை மாடு மூலம் பால் விற்பனை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடம்பூர் குத்தியாலத்தூர் ஊராட்சியில் மட்டும் நாள் ஒன்றுக்கு 2,000 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது இங்கு உள்ள தனியார் பால் நிறுவனம் ஒன்று விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து ஒரு லிட்டருக்கு 12 முதல் 15 ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர்.

மேலும் முழுமையாகப் பாலைக் கொள்முதல் செய்வதில்லை, பால் தரத்தை பரிசோதனை செய்யும் இயந்திரம் அடிக்கடி பழுதாகி விடுகிறது எனவும் தனியார் நிறுவனம் என்பதால் சரியான விலை கிடைப்பதில்லை எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால் மாடு பராமரிப்பு மாட்டுத்தீவன கொள்முதல் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது உற்பத்தியாகும் பாலுக்கு சரியான விலை கிடைப்பதில்லை என தெரிவிக்கும் விவசாயிகள் கடம்பூர் மலைப் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு அரசு பால் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.