வழிய காத்திருக்கும் அணை.! விழி வைத்து காத்திருக்கும் விவசாயிகள்.!!

9 August 2020, 11:41 am
Bhavani DAm - Updatenews360
Quick Share

ஈரோடு : பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பில்லூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் மற்றும் நீர்ப்பிடிப்பு பாதைகளில் பெய்துவரும் மழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இதனால் தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து தற்போது 100 அடியை எட்ட உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 99.49 அடியாகவும் நீர் இருப்பு 28.3 டிஎம்சி ஆகவும் நீர்வரத்து வினாடிக்கு 7617 கன அடியாகவும் உள்ளது.

அரக்கன்கோட்டை தடப்பள்ளி வாய்க்காலில் 400 கன அடி நீரும் காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கும் 500 கன அடி நீரும் என 1100 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து 100 அடியை எட்ட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.