திமுக அமைச்சர்கள் தான் உண்மையான அடிமைகள்…உதயநிதிக்கு அமைச்சரானது எப்படி..? கேபி முனுசாமி கடும் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
15 March 2023, 6:24 pm
KP Munusamy - Updatenews360
Quick Share

எங்களை பாஜகவின் அடிமை என கூறும் திமுகவில் ஜனநாயகம் உள்ளதா..? என்றும், திமுகவில் உள்ள தலைவர்கள் அடிமையாக நடத்தப்படுவதாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று கட்சி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமி கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த கே பி முனுசாமி, தமிழகம் முழுவதும் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு இன்று எடப்பாடி பழனிசாமி கையொப்பம் இட்ட உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது என தெரிவித்தார். தொடர்ந்து தமிழகத்தில் தவறான கையாலும் முறையால் தற்பொழுது ஆவின் நிர்வாகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிர்வாக பாதிப்பால் சுமார் 30 லட்சம் நுகர்வோர்களும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

திமுக அரசு உரிய முறையில் செயல்படாத காரணத்தினாலும், நல்ல திறமையான அதிக அதிகாரிகளை பணியமர்த்தாத காரணத்தினாலும், தனக்கு வேண்டியவர்களை பணியமத்திய காரணத்தினாலும் ஒவ்வொரு துறையும் செயலிழந்து உள்ளது. மாவட்ட நிர்வாகத்தை பொறுத்தவரையில் எந்த துறையும் முறையாக செயல்படவில்லை. உள்ளாட்சி, நகராட்சி, பொதுப்பணித்துறை, பள்ளிக் கல்வித்துறை என அனைத்து துறைகளும் முறையாக செயல்படுவதில்லை என குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய கே.பி.முனுசாமி, எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது மிகப்பெரிய காழ்புணர்ச்சியை காட்டுகிறது. இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டரீதியாக செயல்படவில்லை. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பொதுவெளியில் அவமானப்படுத்தும் வகையில் செயல்படும் நபரை எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் என்ற முறையில் தடுத்து நிறுத்துகிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யாமல் தங்களது கடமையைச் செய்த பாதுகாவலர் மீது வழக்கு பதிவு செய்கின்றனர்.

இதேபோல் முதல்வர் சுற்றுப்பயணத்தில் யாரேனும் விமர்சனம் செய்தால் அந்த நபர் மீது நடவடிக்கை எடுப்பார்களா அல்லது முதல்வரின் பாதுகாவலர் மீது வழக்கு பதிவு செய்வார்களா என்று கேள்வி எழுப்பிய கே.பி.முனுசாமி, இன்றைய ஆட்சியாளர்கள் விசித்திரமான வகையில் அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர் என குற்றம் சாட்டினார்.

அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த கே.பி.முனுசாமி, கூட்டணி கட்சிகள் குறித்து கருத்து சொல்வது எங்களை நாங்களே விமர்சனம் செய்வதற்கு சமம். கூட்டணி கட்சியினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு இந்தியாவை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய இன்றைய பாரத பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க செயல்படுவோம், என தெரிவித்தார்.

தொடர்ந்து திருச்சி சிவா மற்றும் கே.என்.நேரு ஆதரவாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த முனுசாமி, திமுகவுக்குள் முதலில் ஜனநாயகம் மலர வேண்டும். அதிமுகவை பார்த்து உதயநிதி ஸ்டாலின் பிஜேபியின் அடிமை என கூறுகிறார். எந்தவித அரசியல் அனுபவம் இல்லாத விளையாட்டு பிள்ளையாக இருந்த உதயநிதி ஸ்டாலின், தனது தந்தை கட்சியின் தலைவர் தமிழகத்தின் முதல்வர் என்ற காரணத்தினால் தற்பொழுது அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

50 ஆண்டு காலத்திற்கு மேலாக சட்டமன்ற உறுப்பினராகவும் மூத்த அமைச்சராகவும் உள்ள துரைமுருகன் இருக்கும்பொழுது உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிகளை துவங்கி வைக்கிறார். இதன் மூலம் திமுகவில் ஜனநாயகம் எங்கே இருக்கிறது என கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பினார். எங்களை அடிமை என கூறுகிறார்கள், ஆனால் திமுகவில் மூத்த தலைவர்கள் அடிமையாக இருக்கின்றனர். வலுவானவர்கள், வலுவில் இருந்தவர்களை தாக்குவதற்கு திமுகவில் உரிமை இருக்கிறது. ஆனால், அதிமுகவை பொருத்தவரையில் உண்மையானவரா அல்லது தவறு செய்தவரா என்று தான் பார்க்கப்படும்.

12 மற்றும் 11ம் வகுப்பு தேர்வில் அதிக அளவில் மாணவர்கள் விடுப்பு எடுத்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்ய வேண்டியது கல்வித் துறை தான். மாவட்டம் தோறும் உள்ள கல்வி துறை அதிகாரிகள் மாணவர்கள் படிப்பது குறித்தும், அவர்களது செயல்பாடுகள் குறித்தும், முறையாக கண்காணித்து இருந்தால் இத்தனை மாணவர்கள் தேர்வை புறக்கணித்து இருக்க மாட்டார்கள். இத்தனை ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என சொல்வது இந்த அரசுக்கு வெட்கக்கேடான ஒன்று, என கடுமையாக சாடினார்.

Views: - 386

0

0