எத்தனை பி-டீமை உருவாக்கினாலும்.. அதிமுகவை அசைத்துக் கூட பார்க்க முடியாது ; திமுகவுக்கு ஆர்பி உதயகுமார் சவால்!!

Author: Babu Lakshmanan
10 May 2023, 6:22 pm
Quick Share

குடும்பப் பணத்தை முதலீடு செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் ஜப்பான் செல்கிறாரா..? என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட பாலமேடு பகுதியில் மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பாக கழக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் முகாம் அலங்காநல்லூர் ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி உதயகுமார் கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் சீட்டு படிவம் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய ஆர். பி உதயகுமார் பூத்கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாகவும் , கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அணியை பலப்படுத்து தொடர்பாகவும் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து நிர்வாகிகளிடம் பேசிய அவர், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோவில் பேசியதில் உண்மை தன்மை உள்ள காரணத்தினால் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தயங்குகிறார். ஸ்டாலின் துரோகிகளை வைத்து எத்தனை பி டீமை அண்ணா திமுகவில் உருவாக்கினாலும் அதிமுகவை அசைத்து கூட பார்க்க முடியாது என கூறினார்.

இந்நிகழ்வில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நபர்கள் அந்த கட்சிகளில் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாளை பாண்டி முனீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி. ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி. வறுமை ஒழிப்பு விழாவாக கொண்டாடப் போவதாக தெரிவித்தார்.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசலை மூடிவிட்டு ஜல்லிக்கட்டு மைதானம் அமைப்பது ஏன் என திமுக அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேலும், ஜல்லிக்கட்டு அந்தந்த ஊர் வாடிவாசலில் நடத்தப்பட்டால் தான் அந்த ஊரின் பாரம்பரியம் கலாச்சாரம் வெளிப்படும் எனவும், இதுதான் பல நூறு ஆண்டுகளாக பின்பற்றப்படும் நடைமுறை, இதனை விட்டுவிட்டு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் பாலமேடு வாடிவாசலை மூடுவிழா நடத்தி விடுவார்களோ என்ற ஐயம் மக்களுக்கு எழுந்துள்ளதாக தெரிவித்தார்.

இந்தப் பிரச்சனையை கழகப் பொதுச்செயலாளர் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார். பாரம்பரிய வாடிவாசலை இந்த விடியா திமுக அரசு மூட நினைத்தால் அதிமுக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய ஆர்பி உதயகுமார், விடியா திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகியும், அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை செயல்படுவதற்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என குற்றம் சாற்றினார். இந்தப் பிரச்சனை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சட்டசபையில் விதி எண் 55 கீழ் அரசின் கவனத்தில் கொண்டு சென்ற போது, விவசாயத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கமிஷன் அமைப்பதாக கூறினார். ஆனால் கமிஷன் அமைக்காமல் சர்க்கரை ஆலை செயல்படாமல் இருப்பதால் இந்த பகுதி மக்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

மதுரையில் உள்ள இரண்டு அமைச்சர்கள் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இந்த பிரச்சனை கிணற்றில் போட்ட கல்லாக உள்ளதாக குற்றம் சாட்டினார். உடனடியாக அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை திறக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 23ஆம் தேதி முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் செல்வதாக நேற்று தெரிவித்திருந்தார். அந்த சுற்றுப்பயணம் முதலீடுகளை ஈர்க்கவா அல்லது குடும்ப பணத்தை முதலீடு செய்யவா என கேள்வி எழுப்பினர். மேலும் கடந்த முறை முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் சென்றபோது கொண்டுவரப்பட்டதாக கூறிய முதலீடுகளில் ஒரு சதவீதம் கூட வரவில்லை, என குற்றம் சாட்டினார்.

இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணன், கருப்பையா, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான பங்கேற்றனர்.

Views: - 259

0

0