ஜாலியான பயணத்தின் போது தண்டவாளத்தில் பாறைகள் விழுந்ததால் பரபரப்பு : உதகை சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2021, 12:37 pm
Ooty Train Stop -Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் கல்லாறு – அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் பாறை விழுந்த காரணத்தால் மலை ரயில் சேவை இன்று ரத்தானதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை பல் சக்கரங்களால் இயக்கப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் இம்மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற இம்மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவர். கடந்த பல நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மேலும்,இரவு நேரங்களில் அதிதீவிர கனமழையும் பெய்து வருகிறது. வழக்கமாக ரயில் புறப்படும் முன்பு ரயில்வே ஊழியர்கள் தண்டவாளம் வழியாக நடந்து சென்று தண்டவாளத்தில் ஏதேனும் குறைகள் உள்ளது குறித்து ஆய்வு செய்வர்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் 07.10 மணியளவில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து 180 பயணிகளுடன் புறப்பட்ட மலை ரயில் கல்லாறு ரயில் நிலையத்தை தாண்டி அடர்லி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது திடீரென மலை ரயில் பாதையில் பெரிய,பெரிய பாறாங்கற்கள் விழுந்திருப்பதை கண்ட ரயில் இன்ஜின் ஓட்டுநர் திடீரென ரயிலை நிறுத்தினார்.இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மேலும்,மலை ரயில் பாதையில் விழுந்த பாறாங்கற்களை அகற்ற முற்பட்டனர்.ரயில் தண்டவாளத்தில் விழுந்த கற்கள் அனைத்தும் பெரிய அளவிலான பாறாங்கற்கள் என்பதால் ரயில்வே ஊழியர்களால் அகற்ற முடியவில்லை.இதனையடுத்து ரயிலை ரத்து செய்து மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனால் ஆர்வத்துடன் உதகையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க தங்களது குடும்பத்தினருடன் வந்திருந்த சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இதனையடுத்து 180 பயணிகளுக்கும் பயணச்சீட்டுத்தொகை ரயில்வே நிர்வாகத்தால் முழுவதுமாக திருப்பி வழங்கப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் தனியார் வாடகை வாகனங்களில் தங்களது குடும்பத்தினருடன் உதகை நோக்கி மீண்டும் சென்றனர்.

Views: - 514

0

0