போலி சாதிச் சான்றிதழ்… மோசடி செய்த ஊராட்சி மன்ற தலைவர் : ஆட்சியர் அதிரடி உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2024, 8:31 pm

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட தோளப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, பட்டியலின சமூகப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

அந்தப் பதவிக்கு போட்டியிட்ட மாற்று சமூகத்தைச் சேர்ந்த கல்பனா சுரேஷ் ஆதிதிராவிட பிரிவினர் என போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தார்.

போலி ஜாதி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக, கல்பனா சுரேஷை எதிர்த்துப் போட்டியிட்ட தோளப்பள்ளி ஊராட்சியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் வேலூர் ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான ‘விழிக்கண்’ குழு நடத்திய விசாரணையில், கல்பனா சுரேஷ் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை என்றும், அவர் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்தது போலி சாதிச் சான்றிதழ் என்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரது சாதிச் சான்றிதழ் ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. மேலும் காசோலைகளில் கையெழுத்திடும் உரிமையும் ஆட்சியரால் பறிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்த கல்பனா சுரேஷ் அவரது பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா சுரேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Mari Selvaraj Rajinikanth Movie இரண்டு முறை கதை கேட்டும் மாரி செல்வராஜை ஒதுக்கிய பிரபல ஹீரோ..காரணம் இது தானா.!