சாலையில் காற்றில் பறந்த ரூபாய் நோட்டுகள்… போட்டி போட்டு அள்ளிய பொதுமக்கள்… காவல்நிலையம் எடுத்துச் சென்று விசாரித்த போலீசாருக்கு அதிர்ச்சி!!

Author: Babu Lakshmanan
1 October 2022, 5:44 pm
Quick Share

வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பறிமுதல் செய்யப்பட்ட கட்டு கட்டான ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் கொணவட்டம் சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இன்று காலை காரில் வந்த கும்பல் ஒன்று கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை கொட்டிவிட்டு சென்றுள்ளனர். காற்றில் பறந்த ரூபாய் நோட்டுகளை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளை போட்டி போட்டு எடுத்துள்ளனர்.

இது குறித்து வேலூர் வடக்கு துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் அங்கு சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்து, பொதுமக்கள் எடுத்து வைத்திருந்த ரூபாய் நோட்டுகளையும் வாங்கினர். அதனை காவல் நிலையம் கொண்டு வந்து எண்ணிய போது ரூ.14 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

ரூபாய் நோட்டுகளை சோதனை செய்தபோது அது கலர் ஜெராக்ஸ் எடுத்த கள்ள நோட்டுகள் என தெரியவந்தது. கள்ள நோட்டுகளை வீசி சென்ற கும்பல் யார் என்பதை அறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனைர். இன்று காலையில் தேசிய நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள் குறித்த விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

காற்றில் பறந்த ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் சிலர் எடுத்து சென்றனர். அவர்கள் இந்த ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தக்கூடாது என காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் 500 ரூபாய் நோட்டுகளை வாங்கும்போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்டா அருகே காரிலிருந்து லாரிக்கு பணத்தை மாற்றியபோது போலீசாரிடம் ரூ.14.70 கோடி சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று தேசிய நெடுஞ்சாலையில் கள்ள நோட்டுகளை வீசி சென்ற சம்பவம் வேலூரில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 861

0

0