தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.35 குறைவு: வெளியான திடீர் அறிவிப்பு…படையெடுத்த கேரளா மக்கள்…!!
Author: Aarthi Sivakumar7 October 2021, 12:16 pm
மூணாறு: தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.35 குறைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலால் தமிழகம் வந்த கேரள மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு சமீபத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்தது. இருப்பினும், கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ரூ.100ஐ கடந்து ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையாவது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.35 குறைத்து முதலமைச்சர் உத்தரவிட்டதாக படத்துடன் வலைதளங்களில் செய்தி பரவியது.இதனையடுத்து, பெட்ரோல் விலை ரூ.65 மட்டுமே எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை உண்மை என கருதி இடுக்கி மாவட்டம் பூப்பாறை, ராஜாக்காடு, சாந்தாம்பாறை உள்பட கேரள எல்லையோர மக்கள் ஏராளமானோர் போடி,தேனி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பெட்ரோல் வாங்க குவிந்தனர்.
அப்போது தான் அந்த செய்தி போலி என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 35 குறைக்கப்பட்டதாக வந்த செய்தியை நம்பி ஏராளமான மக்கள் குவிந்ததால் சில பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
0
0