குடும்பத்தகராறு கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி சிக்கியது எப்படி ?

29 September 2020, 1:16 pm
Quick Share

கோவை: கோவையில் குடும்பத்தகராறில் காய் வெட்டும் கத்தியில் கணவனை குத்தி கொலை செய்து விட்டு, எதிர்பாராத விதமாக கத்தி பட்டு உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவியை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை வெரைட்டி ஹால் அருகேயுள்ள திருமால் வீதியை சேர்ந்தவர் பிராங்க்ளின் பிரிட்டோ. 35 வயதான இவர் பீளமேடு பகுதியில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு கரோலின் (31)என்பவருடன் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கழுத்து, வயிறு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அப்போது பிரிட்டோ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேக மரணம் தொடர்பாக வெரைட்டி ஹால் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கணவர் பிராங்க்ளின் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இந்நிலையில் சமையலறையில் காய்கறி நறுக்கி விட்டு திரும்பும்போது எதிர்பாராதவிதமாக பின்னால் நின்ற கணவனின் கழுத்தில் கத்தி பதிந்ததாகவும் காவல் துறையினர் விசாரணையில் கரோலின் கூறியுள்ளார்.

இதில் சந்தேகமடைந்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. மேலும் தாலியை அடமானம் வைத்ததை எடுத்து தர கரோலின் கூறிய போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும், அப்போது காய் வெட்டும் கத்தியால் பிரிட்டோவை குத்தியதால் உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கரோலினை கைது செய்து வெரைட்டி ஹால் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை மனைவியே கொலை செய்து விட்டு, எதிர்பாராத விதமாக கத்தி பட்டு உயிரிழந்ததாக நாடகமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.