கொரோனா சிகிச்சை மையமாக மாறிய பிரபல தனியார் பள்ளி : 300 படுக்கைகளுடன் தயார்!!

4 May 2021, 3:59 pm
School corona Ward -Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் காரமடை வித்யா விகாஸ் தனியார் பள்ளியில் 300 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் தயாராக உள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில வாரங்களாக நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. முதல் கட்ட நோய்த்தொற்று பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையத்தில் இந்துஸ்தான் தனியார் மருத்துவமனையில் 80 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் துவக்கப்பட்டது.

தற்போது அங்கு படுக்கைகள் நிரம்பி விட்டன. மேல் சிகிச்சைக்காக கோவையில் ESI மருத்துவமனை மற்றும் காருண்யா உள்ளிட்ட சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்படுகின்றனர். இதற்கிடையே, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கொரோனாவால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிக சிகிச்சை மையங்களை தயார் செய்ய அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தற்காலிக கொரோனா சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் காரமடை அருகே உள்ள வித்யா விகாஸ் தனியார் பள்ளியில் முதற்கட்டமாக 300 படுக்கை வசதிகளுடன் கூடிய கொண்ட கொரோனா மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

தனித்தனியாக ஒவ்வொரு ரூம்களிலும் 4 படுக்கைகள் என முன்னூறு படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன, இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கும் அளவுக்கு வசதி இருந்தாலும் தற்போது 300 பேருக்கு மட்டுமே படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்காக தேவையான காற்றோட்டமான ஜன்னல் கழிவறை தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அந்த கொரோனா மையத்தை கோவை மாவட்ட வருவாய் அலுவலர்.D.ராமதுரைமுருகன் தலைமையில் சுகாதாரத் துறை வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, மேட்டுப்பாளையம் சுற்றுப்புற பகுதியிலான காரமடை சிறுமுகை உள்ளிட்ட பகுதியில் உள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற அனைத்து வசதிகளுடன் சிகிச்சை பெற இந்த மையம் தயார் நிலையில் உள்ளது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகும் போது மேலும் படுக்கைகள் அதிகப்படுத்தும் என்று அதிகாரிகள் கூறினார்கள்

Views: - 135

0

0