இரண்டாவது முறையாக நிரம்பும் நிலையில் ஆத்துப்பாளையம் நீர் தேக்கம்: விவசாயிகள் மகிழ்ச்சி…!!

28 November 2020, 4:52 pm
karur 2 - updatenews360
Quick Share

கரூர்: ஆத்துப்பாளையம் நீர் தேக்கம் இந்த ஆண்டில் 2வது முறையாக முழுக் கொள்ளளவை எட்ட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கரூர் மாவட்டம் மேற்கு எல்லையில் அமைந்துள்ளது ஆத்துப்பாளையம் நீர் தேக்கம். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் இப்பகுதியில் வரும் தண்ணீர் தேக்கி வைக்க திட்டமிடப்பட்டு இந்த நீர் தேக்கம் கட்டப்பட்டது. அதனை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த நீர் தேக்கத்திற்கு இப்பகுதியில் பெய்யும் மழைநீர், கீழ்பவானி ஆற்றில் வரும் கசிவு நீர், நொய்யல் ஆற்றில் வரும் உபரி நீர் ஆகியவற்றை நீர் ஆதாரமாக கொண்டு இந்த நீர் தேக்கம் கட்டப்பட்டது.

நீர் தேக்கம் திறந்து சில ஆண்டுகளிலேயே நொய்யல் ஆற்றில் வந்த சாயப்பட்டறை கழிவு நீர் கலந்ததால் ஆத்துப்பாளையம் நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்க கூடாது என அப்பகுதி விவசாயிகள் உயர்நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றனர். இந்த நிலையில் கடந்த 18 ஆண்டுகளாக இந்த அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் புதர் மண்டி போய் இருந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு அவை தூர் வாரப்பட்டு, பாசன வாய்க்கால் சீரமைக்கப்பட்டது. வழக்கு தொடரப்பட்ட விவசாயிகளிடம் வழக்கு திரும்ப பெற அறிவுறுத்தப்பட்டு நொய்யல் ஆற்றில் வரும் மழைநீர் பரிசோதிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டு திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் இரண்டாம் ஆண்டாக இந்த ஆண்டும் மழைநீர், கசிவு நீர் மற்றும் நொய்யல் ஆற்றில் வந்த உபரி நீர் வாயிலாக முழுக் கொள்ளளவை எட்டியது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி இந்த நீர் தேக்கத்தில் இருந்து விவசாய தேவைக்காக 20 நாட்கள் 224.64 கன அடி தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நீர் தேக்கத்தில் இருந்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தண்ணீரை திறந்து வைத்தார். அதன் பிறகு நீர் தேக்கத்தில் தண்ணீர் குறைந்ததால், நீர்வரத்து இல்லாமல் இருந்தது.

இதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களாக திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாகவும், கீழ் பவானி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் விவசாய தேவைக்குப் போக வெளியேறிய கசிவு நீர் காரணமாகவும், நொய்யல் ஆற்றில் வந்த கசிவு நீர் காரணமாகவும் நீர் தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க துவங்கியது. இன்றைய நிலவரப்படி 26.90 அடி உயரம் கொண்ட நீர் தேக்கத்தில் 20.17 அடி தண்ணீர் உள்ளது. 235 கன அடி கொள்ளளவு கொண்ட நீர் தேக்கத்தில் தற்போது 133.73 கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதே நிலை தொடருமாயின் இன்னும் சில நாட்களில் இந்த நீர் தேக்கம் இந்த ஆண்டின் 2 வது முறையாக முழுக் கொள்ளளவை எட்டவுள்ளது. இதன் மூலம் க.பரமத்தி ஒன்றியம் மற்றும் கரூர் ஒன்றியங்களில் உள்ள 19,500 ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், ஆண்டு முழுவதும் வறண்டு கிடக்கும் விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.